உள்ளூர் செய்திகள்

அணில் முக அனுமன்!

பொதுவாக, குரங்கு முகம் கொண்டவர், அனுமன். ஆனால், உத்தரபிரதேசம், அலிகார் நகரில் உள்ள, கில்கராஜ் அனுமன் கோவிலில், அணில் முகத்துடன் வித்தியாசமாக காட்சி தருகிறார். இவர், அணிலாக தன் முகத்தை மாற்றிக் கொள்ள காரணம் உண்டு. இலங்கைக்குச் செல்ல ராமபிரான், கடலைக் கடக்க வேண்டி வந்தது. பாலம் கட்ட வானரப் படைகளுக்கு உத்தரவிட்டார். நளன், என்ற வானர பொறியாளர் தலைமையில், பாலம் கட்டும் பணி நடந்தது. வானரங்கள் எல்லாம் மலைகளைப் பிடுங்கி வந்து, கடலில் போட்டன. சில, மணலைக் கொண்டு வந்து கொட்டினர். அப்போது, ஒரு அணில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. பாறை அதன் மேல் விழுந்தால், உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்தார், அனுமன்.'நீ, ஏன் அங்குமிங்கும் ஓடி, எங்கள் பணிக்கு இடையூறாக இருக்கிறாய். வேறு இடத்துக்குப் போய் விடு. ஒரு சிறு கல் உன் மேல் விழுந்தால் கூட, நீ இறந்து போவாய், ஒதுங்கிப் போ...' என்றார்.அதற்கு, 'ராம பக்தரே... ராம சேவையில், நீங்கள் எந்தளவு ஆத்மார்த்தமாக ஈடுபட்டுள்ளீர்கள் என்பதை, நான் அறிவேன். வானரமான நீர், ராமனுக்கு சேவை செய்யும் போது, அணிலான நான் சேவை செய்யக் கூடாதா?'நீங்கள் பெரும் பாறைகளையும், மணலையும் குவியல் குவியலாகக் கொண்டு வந்து கொட்டுகிறீர்கள். நான், என் சக்திக்கு ஏற்ப, என் ஈர உடலை கடற்கரை மணலில் உருட்டி புரட்டி, அதில் ஒட்டும் மணலை, இங்கு கொண்டு வந்து உதறுகிறேன். என் பணி மிக மிக சிறியது தான். ஆனாலும், சிறு துரும்பும் பல் குத்த உதவுமல்லவா?' என்றது, அணில்.அந்த அணிலை ராமனிடம் அழைத்துச் சென்ற, அனுமன், அதன் சேவையைப் புகழ்ந்து பேசினார். ராமனும் அதைக் கையில் எடுத்து வருட, மூன்று கோடுகள் அதன் முதுகில் விழுந்தன. அது ராமனின் நெற்றியில் உள்ள திருநாமம் போல் தோன்றியது.கடவுள் சேவைக்கு பலம், பலவீனம் முக்கியமல்ல. மனமே முக்கியம் என்பதை இந்த சம்பவம் மூலம் உணர்ந்தார், அனுமன். தன்னலமற்ற அந்த அணிலின் முகத்துடன் எங்காவது எழுந்தருள திருவுளம் கொண்டார்.ஓரிடத்தில் அணில் முகத்துடன் சிலையாக மாறி, புதைந்து கிடந்தார். துறவி ஒருவரின் கனவில் தோன்றி, தான் புதைந்து கிடந்த இடம் பற்றி கூறினார்.துறவி, தன் சீடனை அனுப்பி அந்த இடத்தைப் பார்த்த போது, அங்கே, சில அணில்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அந்த இடத்தை தோண்டிய போது, சிலை கிடைத்தது. அது, அணில் முகத்துடன் இருந்தது கண்டு, அனைவரும் ஆச்சரியப்பட்டனர். பிறகு, அதை பிரதிஷ்டை செய்து, கோவில் எழுப்பினர்.இந்த கோவிலை முற்காலத்தில், பாண்டவர்கள் எழுப்பினர். அது பழுதடையவே, பூமியில் புதைந்தது, சிலை. பிற்காலத்தில், இந்த கோவில் வெளிப்பட்டது.அலிகார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, 2 கி.மீ., துாரத்திலுள்ள அச்சல் ரோட்டில், அச்சல் தாம் கோவில் உள்ளது. காலை, 6:30- மதியம், 12:30 மணி, மாலை, 4:30- இரவு, 10:00 மணி வரை, கோவில் திறந்திருக்கும்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !