விசேஷம் இது வித்தியாசம்: கிருஷ்ணர் வணங்கிய ராமர்!
ராமருக்கும், கிருஷ்ணருக்கும் சம்பந்தமில்லையே... மேலும், இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள் தானே! தன்னைத்தானே எப்படி வணங்க முடியும்?திரேதா யுகத்தில் பிறந்தவர், ராமர். அடுத்த யுகமான துவாரபரத்தில் பிறந்தவர், கிருஷ்ணர். வித்தியாசமாக தெரிகிறதே!கதையைக் கேட்போம்.கேரளத்தில், திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில், 'நாலம்பலம்' எனப்படும், நான்கு கோவில்கள் உள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் இருக்கிறது. அவரது சகோதரர்கள், அவர் அருகில் இருப்பர்.தமிழக மக்களுக்கும், நால்வரையும் ஒருங்கே தரிசிக்கும் பாக்கியத்தை, கும்பகோணம் ராமசாமி கோவில் தந்துள்ளது. ஆனால், பாரதத்திலேயே, ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கனர் ஆகிய, நால்வருக்கும் தனித்தனி கோவில்கள் உள்ள பெருமை, கேரளத்திற்கே கிடைத்துள்ளது.இந்த, நான்கு கோவில்களையும் நாலம்பலம் என்பர். நாலு அம்பலம் என்பதே, நாலம்பலம் ஆயிற்று. அம்பலம் என்றால் கோவில்.இந்த கோவில்களில் உள்ள விக்ரகங்கள், முதலில் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகையில் இருந்தன. தன் அவதாரங்களிலேயே உயர்ந்தது, ராம அவதாரம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை ஏற்று, இனிய முகத்துடன், பதவியைத் துறந்து, பெற்ற தாயைத் துறந்து, இன்முகத்துடன் காட்டுக்கு சென்றார், ராமர்.இதனால், தன்னைத் தானே வணங்கும் எண்ணம் கிருஷ்ணருக்கு வந்தது. அது மட்டுமின்றி, முற்பிறப்பில் தன் தம்பிகளாகப் பிறந்து, தன் மேல் பாசமும், பக்தியும், அன்பும் வைத்திருந்த லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோரையும் வணங்க விரும்பினார். இதற்காக அவர்களின் விக்ரகங்களைச் செய்து பூஜை நடத்தி வந்தார். துவாரபரயுகத்தின் முடிவில், கிருஷ்ணரும் மாண்டு போனார். அப்போது ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தில், கிருஷ்ணர் பூஜித்த சிலைகள், கேரளம் பக்கமாக கரை ஒதுங்கின. அவற்றைக் கண்டெடுத்த மீனவர்கள், மீனவ தலைவரான வக்கிகைமாலிடம் ஒப்படைத்தனர். அவர் நால்வருக்கும் தனித்தனி கோவில்கள் எழுப்பினார்.திருச்சூரிலிருந்து, 23 கி.மீ., துாரத்தில், திருப்பிரையார் ராமர் கோவிலும், 22 கி.மீ., துாரத்தில் இரிஞ்ஞாலக்குடாவில், பரதர் கோவிலும், இரிஞ்ஞாலக்குடாவில் இருந்து 8 கி.மீ., துாரத்தில் உள்ள, பாயம்மல் என்ற ஊரில், சத்ருக்கனர் கோவிலும், எர்ணாகுளம் மாவட்டம், அங்கமாலியில் இருந்து, 9 கி.மீ., துாரத்தில் உள்ள மூழிக்குளத்தில், லட்சுமணர் கோவிலும் உள்ளன.இதில், மூழிக்குளம் லட்சுமணர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. லட்சுமணரை இதன் மூலம் கவுரவித்துள்ளார், பெருமாள்.'கண்டேன் சீதையை...' என, ராமருக்கு உயிர் வரும்படியாக செய்த அனுமன், முதன் முதலாக தகவலைத் தெரிவித்த இடம், திருப்பிரையாரில் தான் என்பது விசேஷ தகவல்.மன நிம்மதி, நோயற்ற வாழ்வு, செல்வ வளம் கிடைக்க, இந்த கோவில்களுக்கு சென்று வருகின்றனர், பக்தர்கள். இனி, உங்கள் பயணமும் நாலம்பலம் நோக்கி இருக்கும் தானே! தி. செல்லப்பா