விசேஷம் இது வித்தியாசம்: ஆசிரியர்களை காத்த மாணவன்!
மே 11 - நரசிம்ம ஜெயந்திஆசிரியர்கள் தான், மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவர். ஆனால், ஒரு மாணவன், தவறான வழியில் செல்ல துாண்டப்பட்ட ஆசிரியர்களுக்கு, பாடம் கற்றுத் தந்ததுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை காப்பாற்றவும் செய்தான். அவன் தான் நரசிம்ம பக்தனான, பிரகலாதன்.காஷ்யபர் - திதி தம்பதியின் புதல்வன், இரண்யன். இவனது மனைவி, கயாது. இவர்களது மகன், பிரகலாதன். பிரகலாதன் என்றால், மேலான ஆனந்தம் கொண்டவன் என, பொருள். இவன், கர்ப்பத்தில் இருந்த காலத்திலேயே, நாரதர் மூலம் நாராயண நாமம் கேட்டதால், திருமாலின் தீவிர பக்தனாகி விட்டான்.மனிதர்களாலும், வேறு ஜீவராசிகளாலும், ஆயுதங்களாலும் அழியாத வரம் பெற்றவன் என்பதால், எல்லா லோகங்களையும் கைப்பற்றி அங்குள்ளவர்களை அடக்கி வைத்தான், இரண்யன். தன்னையே கடவுளாக பிரகடனம் செய்தான்.மகன் பிரகலாதனை குருகுலத்தில் சேர்த்தான். அவனுக்கு, சண்டன், அமர்கன் என்பவர்கள் குருமார்களாக இருந்தனர். இரண்யனின் உத்தரவுபடி, 'இரண்யனே கடவுள்' என, சொல்லிக் கொடுத்தனர்.ஆனால், 'நாராயணனே முழு முதற்கடவுள்...' என, சாதித்தான், பிரகலாதன்; தன் நண்பர்களுக்கும் அதையே சொல்லித் தந்தான். இதுபற்றி, இரண்யனிடம் புகார் செய்தனர், குருமார்கள். மந்திர தந்திரம் தெரிந்தவர்கள், அந்த அசுர குருமார்கள்; பில்லி, சூனியம், பேய்களை ஏவுதல் போன்ற மந்திரக்கலைகளில் கை தேர்ந்தவர்கள்.தன் மகனை அழைத்து கண்டித்தான், இரண்யன். அதைக் கண்டுகொள்ளவில்லை, பிரகலாதன். கோபமடைந்த இரண்யன், தன் மகனை விஷம் கொடுத்தல், நெருப்பில் தள்ளுதல், மலையிலிருந்து கீழே உருட்டி விடுதல் போன்ற சகல கொடிய செயல்களையும் செய்து கொல்ல முயன்றான். ஆனால், நாராயண நாமம் அவனைக் காத்தது.கடைசியாக, குருமார்களான, சண்டன், அமர்கனை அழைத்த இரண்யன், பிரகலாதன் மீது சக்தி மிக்க பேயை ஏவச் சொன்னான். அவர்களும் அதை செய்தனர். ஆனால், பிரகலாதனை அந்த பேய்களை விட சக்தி வாய்ந்த நாராயண நாமம் துரத்தவே, தங்களை ஏவிய குருமார்களையே அழிக்கப் பாய்ந்தோடின, அந்த பேய்கள்.தந்தையின் உத்தரவுபடியே குருமார்கள், அப்படி செய்வதை அறிந்த, பிரகலாதன், நாராயணனை வணங்கி, 'பேய்களால் அவர்களுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது...' என, வேண்டினான். திருமாலின் அருளால் அழிந்து போயின, பேய்கள்.இதை கண்டு நெகிழ்ந்த ஆசிரியர்கள், துன்பம் இழைத்தும் தங்களை காத்த மாணவனிடம் மன்னிப்பு கேட்டனர். கடைசியாக, ஒரு துாணை சுட்டிக்காட்டி, 'இதில் நாராயணன் உள்ளான்...' என, பிரகலாதன் சொல்லவே, துாணை உடைத்தான், இரண்யன். நரசிம்மராய் வந்து அவனை வதம் செய்தார், திருமால்.உயிருக்கு உலை வைத்தவர்களுக்கும் கருணை செய்ய வேண்டும் என்பதே, பிரகலாத சரிதம் நமக்கு உணர்த்தும் பாடம். நரசிம்ம ஜெயந்தி நன்னாளில், இந்த நற்குணம் நம் அனைவருக்கும் கிடைக்க, திருமாலை வேண்டுவோம்.தி. செல்லப்பா