உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைக்கும் விரதம்!

டிச., 25 - பிள்ளையார் நோன்பு எ ட்டு வயது முதல் குழந்தைகள் விரதம் அனுஷ்டிக்கலாம் என்பது மரபு. ஆனால், வயிற்றுக்குள் இருக்கும் போதே குழந்தை ஒரு விரதம் அனுஷ்டிக்கிறது. அது தான், பிள்ளையார் நோன்பு. இந்த விரதம், நகரத்தார் வசிக்கும் பகுதிகளில் மட்டுமே விசேஷம். இந்த விரதம் நமக்கு தரும் படிப்பினைகளை அறிந்து கொண்டால், எல்லாருமே இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம் என, தோன்றும். ஒரு கார்த்திகை திருநாளன்று, நகரத்தார்கள் வெளிநாட்டு வணிகம் செய்ய கப்பலில் சென்றனர். மறுநாள் கப்பல் புயலில் சிக்கவே, தங்கள் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை எண்ணி, தங்கள் வேஷ்டியில் இருந்து தினமும் ஒரு இழை வீதம் எடுத்து பிள்ளையார் மீது போட்டனர். விநாயகர் அருளால் கப்பல், ஓரிடத்தில் கரை ஒதுங்கியது. அந்த நாள் சஷ்டி திதியும், சதய நட்சத்திரமும் இணைந்த நாளாக இருந்தது. தங்களைக் காத்த விநாயகருக்கு, அரிசி மாவில் சிலை வடித்து, கருப்பட்டி பணியாரம், பொரி வகைகள் படைத்து, 21 இழைகளையும் திரியாக்கி நெய் விளக்கு ஏற்றினர். இந்த விரதம் அனுஷ்டிக்க இன்னொரு வரலாறும் உண்டு. தாயை இழந்த ஒரு இளவயது மங்கை, சித்தியின் கொடுமைக்கு ஆளானாள். தன் வைரக்கம்மலை, அவள் திருடி விட்டதாக குற்றம் சாட்டி வெளியே அனுப்பினாள், சித்தி. அந்தப் பெண், விநாயகர் கோவிலுக்கு சென்று, தன் மீதான களங்கத்தை துடைக்க வேண்டினாள். தன் ஆடையில் இருந்து தினமும் ஒரு இழை வீதம் எடுத்தாள். 21 நாட்கள் கடந்ததும், ஒரு எறும்புக் கூட்டம் தன் வீடு நோக்கி சென்றதைக் கண்டு, அதைப் பின் தொடர்ந்தாள். வீட்டுக்குள் இருந்த ஒரு சிறு புதருக்குள் எறும்புகள் சென்றன. அதை தோண்டிப் பார்த்ததில் உள்ளே வைரக்கம்மல் கிடந்தது. தன் களங்கம் நீக்கிய, விநாயகருக்கு அவள் கருப்பட்டி பணியாரம் மற்றும் பொரி படைத்து வழிபட்டாள். இப்போதும் நகரத்தார் ஒரு பருத்தி துண்டு அல்லது வேஷ்டியில் இருந்து, 21 நாட்கள் தினமும் ஒன்று வீதம் இழை எடுக்கின்றனர். பிள்ளையார் நோன்பன்று இந்த இழைகளை வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தாற் போல் நறுக்கிக் கொள்வர். இனிப்பு மாவில் கூம்பு வடிவில், பிள்ளையார் செய்து, அதில் திரியைச் செருகுவர். தீபமேற்றி அப்படியே விழுங்கி விடுவர். இதில் விசேஷம் என்னவென்றால், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் சேர்த்து ஒரு திரியை, மாவு பிள்ளையாரில் செருகி, தீபமேற்றி கூடுதலாக ஒரு மாவு உருண்டையை விழுங்கி விடுவார், அந்தத் தாய். எந்த ஆபத்தான சூழலையும் கடவுள் பக்தி காப்பாற்றும். ஆராயாமல் யார் மீதும் பழி சுமத்தக்கூடாது போன்ற படிப்பினைகளை இந்த விரதம் நமக்கு அறிவுறுத்துகிறது. அனைவருமே இந்த விரதத்தை அனுஷ்டித்து, விநாயகர் அருளைப் பெறலாமே! - தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !