| ADDED : டிச 01, 2025 06:10 AM
பெங்களூரு: மைசூரு சாலையில் தாயாரை பணிக்கு விட செல்லும் போது, கன்டெய்னர் வாகனம் மோதியதில் தாயும், மகனும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தனர். ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பெங்களூரு தொட்டகொல்லரஹட்டியை சேர்ந்தவர் அஸ்வினி, 41. இவரது மகன் அபிலாஷ், 19. அஸ்வினி, கே.ஆர்., மார்க்கெட் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று காலை, தாயாரை பணியில் விட இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்றனர். ஒரு ஹெல்மெட் தான் இருந்தது. அதையும் அணியாமல் பைக்கில் மாட்டியபடி பயணித்துள்ளனர். கே.ஆர்., மார்க்கெட் அருகே செல்லும் போது, காருக்கும், கன்டெய்னர் லாரிக்கும் இடையே புகுந்து சென்றுவிடலாம் என்று அபிலாஷ் ஓட்டினார். அப்போது கன்டெய்னர் லாரி மோதியதில் இருவரும் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த மேற்கு பிரிவு போக்குவரத்து டி.சி.பி., அனுாப் ஷெட்டி, பாதராயனபுரா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். முதல்கட்ட விசாரணையில், வாகனத்தில் ஒரு ஹெல்மெட் இருந்தும், அதை இருவரில் ஒருவர் கூட அணியவில்லை. இதுவே, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்தனர்.