உடுப்பி: ''பெலகாவியில் நடக்கும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் தெரிவித்தார். உடுப்பியில் நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலத்தில் இரண்டு மாதமாக ஆட்சி இயந்திரம் இயங்காமல் முடங்கி உள்ளது. நெறிமுறை இல்லாத துச்சாதன நிர்வாகம் நடக்கிறது. 90 சதவீதம் அமைச்சர்கள், விதான் சவுதாவுக்கே வருவது இல்லை. முதல்வர் மைசூரிலும், துணை முதல்வர் டில்லியிலும் காலம் கடத்துகின்றனர். இருவரும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லை. எனவே பெலகாவியில் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். இது தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியிலும் ஆலோசனை நடத்துவோம். மாநிலத்தின் நலனை மறந்துள்ள அரசின் செயலை, வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம். ஜாதி, சமுதாயங்களை காங்கிரஸ் பிரிக்கிறது. நாற்காலியை தக்க வைத்து கொள்ள, மடாதிபதிகளை பேச வைக்கின்றனர். காங்., தேசிய தலைவரும், தலித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவை அலட்சியப்படுத்துகின்றனர். இப்போதைக்கு பா.ஜ., அரசு அமைக்க, எந்த வகையிலும் முயற்சிக்காது. காங்கிரஸ் தன் சுமையை தாங்க முடியாமல், தானாகவே கவிழ்ந்து விழும் என, காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.