| ADDED : நவ 28, 2025 05:50 AM
தாவணகெரே: வெட்டியாக பொழுதை கழிக்காமல், வேலைக்கு செல் என, பெற்றோர் அறிவுரை கூறியதால், சிறுவன் தற்கொலை செய்து கொண்டார். தாவணகெரே நகரின் சிக்கனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் தருண், 16. இவர் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பள்ளிக்கும் செல்லவில்லை. நடத்தை சரியில்லாத சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு, தவறான பாதையில் சென்றார், தினமும் அவர்களுடன் ஊர் சுற்றினார். மகனின் செயலால் மனம் வருந்திய பெற்றோர், மகனுக்கு பல முறை அறிவுரை கூறினர். ஆனால் தருண் மாறவில்லை. நேற்று முன்தினமும் கூட, பெற்றோர் 'கண்டவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி, காலத்தை வீணாக்க வேண்டாம். ஏதாவது ஒரு பணிக்காவது செல். தவறான பாதையில் செல்ல வேண்டாம்' என திட்டி, அறிவுரை கூறினர். இதனால் கோபமடைந்த தருண், தாவணகெரே நகர் ரயில் நிலையத்துக்கு சென்று, தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, தற்கொலை செய்து கொண்டார். வீட்டை விட்டு சென்ற மகன் வீடு திரும்பாததால், பீதியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். எங்கும் தென்படாததால், தாவணகெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய போது. தருண் தற்கொலை செய்து கொண்டதை கண்டுபிடித்தனர்.