: ராம்நகர் மாவட்டம், பிடதியின் ஜதேனஹள்ளியில் அமைந்துள்ளது ஸ்ரீ வரதராஜேஸ்வரா சிவன் கோவில். இப்பகுதியில் ஸ்ரீ நாராயண ரெட்டி என்பவரின் நிலத்தில் வாரத்திற்கு ஒருமுறை பாம்பு தென்பட்டது. இது, பல மாதங்கள் தொடர்ந்ததால், பெரியவர்களிடம் விளக்கம் கேட்டார். அவர்களும், கப்பாலம்மா தேவியை தரிசித்து வரும்படி கூறினர். இதன்படி, அவரும் கப்பாலம்மாவை தரிசித்தார். அன்றைய தினம் உறங்கியபோது, நாராயண ரெட்டி கனவில் முனிவர் தோன்றினார். அவரிடம், கப்பாலம்மாவை தரிசித்து வேண்டியது குறித்து தெரிவித்தார். அதற்கு முனிவர், பாம்பு காட்சி அளித்த இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி அறிவுறுத்தி உள்ளார். சிவப்பு லிங்கம் சாதாரண மனிதனான தன்னால், கோவில் கட்ட முடியுமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர், வட மாநிலத்திற்கு ஆன்மிக தரிசனம் சென்றிருந்தார். அப்போது, 'நர்மதா ஆற்றில் சிவப்பு நிறத்தில் சிவலிங்கம் உள்ளது. என்ன செய்வது?' என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு நாராயண ரெட்டி, தனக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி பார்சலில் அனுப்பி வைத்தார். பார்சலை திறந்தபோது, ஆச்சரியம் அடைந்தார். இத்தகைய சிவலிங்கத்தை அவர் எங்கும் கண்டதில்லை. இதை தொடர்ந்து கோவில் கட்டும் பணிகள் நடந்தன. 2021 நவ., 21ல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் லிங்கத்தை, எங்கிருந்தோ வந்த ஒரு தவளை, மூன்று முறை வலம் வந்தது. இந்த தவளை, எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. கோவில் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றது. இங்குள்ள சிவனை, வரதராஜேஸ்வரா என்று அழைக்கின்றனர். கோவில் கட்டப்பட்டு இரண்டு மாதங்களுக்கு பின், மின்னல் தாக்கியதில் கோவில் வளாகத்தில் இருந்த தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இந்த மரம் இன்னமும் அங்கு தான் உள்ளது. பூசணிக்காய் தீபம் இக்கோவில் பற்றி சுற்றுப்பகுதிகள் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் பரவியது. தினமும் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. பிரதோஷத்தன்று ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் அங்கபிரதக் ஷனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இதுமட்டுமின்றி, சிவனுக்கு பூசணிக்காய் தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டிய காரியம் நிறைவேறுவதாக நம்புகின்றனர். இக்கோவிலுக்கு ஸ்ரீ கைலாசபுரி மஹா அகோரி சுவாமிகள், 2023ல் வருகை தந்தார். கோவிலை வலம் வந்த அவர், விரைவில் இக்கோவில் மேலும் பிரசித்தி பெறும் என்றார். இதன்படி இப்போதும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எப்படி செல்வது? l பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், பிடதி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். l திருவிழா: மஹா சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி l திறப்பு: காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை. - நமது நிருபர் -