உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ரேஷன் கார்டு வழங்காத அரசு 40 ஆண்டாக அலையும் மூதாட்டி

ரேஷன் கார்டு வழங்காத அரசு 40 ஆண்டாக அலையும் மூதாட்டி

ஷிவமொக்கா: ஏழைகளுக்காக ‘அன்னபாக்யா’ உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாக அரசு கூறும் வேளையில், மூதாட்டி ஒருவர், ரேஷன் கார்டுக்காக, 40 ஆண்டுகளாக அலைபாய்கிறார். உடுப்பி மாவட்டத்தின் காவடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி வனஜா ஷெட்ரி, 73; சிறு வயதிலேயே திருமணமாகி, ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகாவின் மன்டகத்தேவுக்கு வந்திருந்தார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் இறந்த பின், பிழைப்பு தேடி மகனுடன் பெங்களூரு சென்றார். ஆனால், அங்கு பிழைக்க முடியாமல், ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகரின் அடகோடா கிராமத்திற்கு வந்தார். மகன் தன் குடும்பத்துடன் இருப்பதால், வனஜா தனியாக வசிக்கிறார். இவரிடம் ரேஷன்கார்டு இல்லை. இதற்காக பல முறை விண்ணப்பித்தார். அலுவலகம், அலுவலகமாக அலைகிறார். 40 ஆண்டுகளாக முயற்சித்தும், இதுவரை அவருக்கு ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் அவதிப்படுகிறார். வனஜாவுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளது. கால் வலியும் உள்ளதால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. அரசிடம் இருந்து கிடைக்கும் சொற்ப தொகையை வைத்து வாழ்க்கை நடத்துகிறார். ரேஷன்கார்டு இல்லாததால், அரசின் அன்னபாக்யா அரிசி உட்பட எந்த சலுகைகளும் அவருக்கு கிடைப்பதில்லை. ‘இந்த வயதில் உழைத்து பிழைக்க முடியவில்லை. இனியாவது என் பசியை போக்க ரேஷன்கார்டு தாருங்கள்’ என, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளிடம் மன்றாடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ