உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் வேகத்தடை இல்லாததால் பெரும் ஆபத்து

 தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் வேகத்தடை இல்லாததால் பெரும் ஆபத்து

தங்கவயல்: தங்கவயல் ஏ.ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் சாலையில் வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்விஷயத்தில் பொதுப்பணித் துறை அலட்சியம் காட்டி வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கவயல் பெமல் நகர் விளையாட்டு அரங்கம் அருகே ஏ.ஆர்.டி.ஓ., எனும் உதவி போக்கு வரத்து அதிகாரிகள் அலுவலகம் தங்கவயல் - பங்கார்பேட்டை முக்கிய சாலையில் கட்டப் பட்டது. இந்த அலுவலகம், அக்டோபர் 28 முதல் செயல்பட தொடங்கியது. இந்த அலுவலகம் முன், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி, இருவழிச் சாலையில் விருப்பப்படி சாலையை கடக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. யு டர்ன் பங்கார்பேட்டையில் இருந்து இந்த அலுவலகத்திற்கு வருவோர் நேரடியாக இந்த அலுவலகத்தை அடைவர். ஆனால், தங்கவயலில் இருந்து வருவோர் இரட்டைப்பாதை சாலையில் பெமல் ஆலமரம் பகுதிக்கு சென்று 'யு டர்ன்' எடுக்க வேண்டும். அதேபோல், ஏ.ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து பங்கார்பேட்டை நோக்கி செல்ல, பெமல் போலீஸ் நிலையத்திற்கு சென்று யு டர்ன் எடுக்க வேண்டும். ஆனால், வாகன ஓட்டிகள் அவ்வளவு தூரம் வாகனங்களில் செல்ல தயங்குவதால், அலுவலகத்திற்கு முன் உள்ள 'டிவைடர்' என்ற சாலை பிரிப்பானைக் கடக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அலுவலகம் அருகே சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் குறித்து பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுவரை மூன்று கடிதங்கள் எழுதப் பட்டுள்ளன. சாலை பிரிப்பானை அகற்றி பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. ஆனால், பொதுப்பணித் துறை இடமிருந்து, எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தனர். விதிகள் மீறல் பொதுப் பணித் துறை நிர்வாக உதவி பொறியாளர் ராஜசேகர் கூறுகையில், ''ஏ.ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு, போக்குவரத்து விதிகளை மீறி மக்கள் சாலையை கடப்பது குறித்து தெரிய வந்து உள்ளது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. பயணியர் வேகத்தடை அமைத்தால் விபத்தில் சிக்காமல் இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே, வேகத்தடை அமைக்கப்படும். இப்பகுதியில் வண்ணம் அடித்து, அம்புக்குறியிட்டு எச்சரிக்கை செய்யப்படும். அறிவியல் பூர்வமாக அனைத்தும் செய்யப்படும்,'' என்றார் . வட்டார போக்குவரத்து அலுவலர் கஜேந்திரன் கூறுகையில், ''சாலையில் வேகத்தடை கட்டாயம் அமைக்க வேண்டும். இல்லையேல் வருங்காலத்தில் ஏற்படும் பேரழிவுகளுக்கு பொதுப்பணித்துறை பொறுப்பாகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை