| ADDED : ஜூலை 15, 2024 02:25 AM
புதுடில்லி:இந்தியாவின் கார் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 18.60 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இது குறித்து, 'சியாம்' எனும் இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் கள் கூட்டமைப்பின் தலைவர் வினோத் அகர்வால் கூறியதாவது: முக்கிய சந்தைகளின் வலுவான தேவை காரணமாக, இந்திய கார்களின் ஏற்றுமதி எண்ணிக்கை, முதல் காலாண்டில் 1.80 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18.60 சதவீதம் வளர்ச்சியாகும். உள்நாட்டில் கார்களின் விற்பனை எண்ணிக்கை 10-.26 லட்சமாக இருந்தது. இது, முந்தைய ஆண்டை காட்டிலும் 3 சதவீத வளர்ச்சியையே கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனையில் வளர்ச்சி குறைவு பற்றி நாம் அதிகம் கவலை கொள்ள தேவையில்லை. இது மிதமான வளர்ச்சியாகும். ஆண்டு இறுதியில் விற்பனை எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பருவ மழை மற்றும் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வளர்ச்சி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனையில் தொடர் சரிவுக்கு, சிறிய ரக கார்களுக்கான தேவை குறைந்தது ஒரு காரணமாகும். தரவுகளின்படி, 'செடான், ஹேட்ச்பேக்' உள்ளிட்ட சிறிய ரக கார்களின் ஜூன் மாத உள்நாட்டு விற்பனை, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் 17.50 சதவீதம் குறைந்துள்ளது.மின்சார கார்களின் விற்பனையும், ஜூனில் முந்தைய ஆண்டை காட்டிலும் 13.5 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாகன பிரிவு வளர்ச்சி காண, சில சலுகைகளை நாங்கள் பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.