உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மின் வாரியம் மீது நிறுவனங்கள் அதிருப்தி: வைப்புத்தொகை கணக்கு முடிக்க தாமதம்

மின் வாரியம் மீது நிறுவனங்கள் அதிருப்தி: வைப்புத்தொகை கணக்கு முடிக்க தாமதம்

சென்னை:வைப்புத்தொகை மற்றும் அதற்கான வட்டி வழங்குவது தொடர்பான கணக்கை முடிக்காமல், மின் வாரியம் தாமதம் செய்வது, தொழில் துறையினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின் வாரியம், உயரழுத்த பிரிவில் இடம்பெறும் பெரிய தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்கும்போது, குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக வசூலிக்கிறது. இது, ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும். அதன்படி, மின் பயன்பாடு அதிகரித்துள்ள நுகர்வோரிடம் கூடுதல் வைப்புத் தொகை வசூலிக்கப்படும். குறைவாக உள்ளவர்களிடம் வைப்பு தொகை வசூலிப்பதில்லை. வைப்புத் தொகைக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கும் வட்டியை, மின் வாரியம் வழங்குகிறது. கடந்த, 2023 - 24ம் நிதியாண்டிற்கு, 6.75 சதவீதம் வட்டி வழங்க, இந்தாண்டு மார்ச், 12ல் உத்தரவிடப்பட்டது. வட்டி கணக்கிடப்பட்டு, தொழில் நிறுவனங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இன்னும் இந்த பணியை மின் வாரியம் முடிக்காமல் தாமதிப்பது, தொழில்முனைவோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:உயரழுத்த பிரிவில் இடம்பெறும் ஒவ்வொரு நுகர்வோரும், இந்தாண்டு கூடுதலாக வைப்புத் தொகை வைத்துள்ளனர். கூடுதல் வைப்புத் தொகை, அதற்கு வழங்கப்படும் வட்டி, மின் நுகர்வோரின் எதிர்வரும் மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும். எனவே, வைப்புத் தொகை, அதற்கான வட்டி கணக்கு சமர்ப்பிக்கும் பணியை ஆண்டுதோறும் ஏப்ரலில் துவக்கி, ஜூன் இறுதிக்குள் முடிக்க வேண்டும்.இதை, ஒவ்வொரு நுகர்வோருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் வழிவகுத்துள்ளது. ஆனால், இதுவரை மின் வாரியம், வட்டி விபரத்தை தெரிவிக்கவில்லை.இதுகுறித்து கேட்டால், லோக்சபா தேர்தல் நடத்தை விதியை காரணமாக கூறினர். தேர்தல் முடிந்து இவ்வளவு நாட்களாகியும் கணக்கை முடிக்கவில்லை. எனவே, கூடுதல் வைப்புத் தொகை தொடர்பான கணக்கை விரைந்து முடித்து, அது, மின் கட்டணத்தில் சரிசெய்யப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ