சென்னை:தென் மாவட்டங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் அதிக முதலீடுகளை ஈர்க்க, விருதுநகர் - கோவை 765 கிலோ வோல்ட் திறனுக்கான வழித்தட பணிகள், விரைந்து முடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, தொழில் துறையினரிடம் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை, சென்னைக்கும்; திருவள்ளூரில் அமைக்கப்படும் அனல் மின் நிலையங்களின் மின்சாரம், மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் எடுத்து செல்லப்பட உள்ளது. இதற்காக மின் வாரியம், வட சென்னை - விழுப்புரம் - அரியலுார் - விருதுநகர் - கோவையில் தலா ஒரு, 765 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையமும், அவற்றை இணைக்க, அதே திறனில் வழித்தடமும் அமைக்கிறது. கடந்த, 2014 - 15ல் துவங்கிய, வட சென்னை - அரியலுார் வழித்தடம் சமீபத்தில் செயல்பாட்டிற்கு வந்தது. அதில், அரியலுார் துணைமின் நிலையம், 2023 டிசம்பரிலும், வட சென்னை இந்தாண்டு பிப்ரவரியிலும் செயல்பாட்டிற்கு வந்தன. ஆனால், விருதுநகர், கோவையில் துணைமின் நிலையங்கள் அமைக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 32 நிறுவனங்கள், 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் புதிய மின் திட்டங்களில் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன. இவையும் தென் மாவட்டங்களில் தான் அதிகளவில் அமைக்கப்பட உள்ளன. எனவே வழித்தட பணிகள் விரைவாக முடிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் விரும்பு கின்றனர்.இதுகுறித்து, மின் தொடரமைப்பு கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விருதுநகர் - கோவை வழித்தடத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.