| ADDED : ஆக 21, 2024 12:47 AM
புதுடில்லி: சீனா மற்றும் வியட்நாம் நாடுகளிலிருந்து மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் உருக்கின் அளவு அதிகரித்துள்ளதால், இந்திய உருக்கு நிறுவனங்கள் தங்களது உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்வதில் சிரமப்படுகின்றன.இதன் காரணமாக, 1 டன் உருக்கு விற்பனையில், உள்நாட்டு நிறுவனங்கள் ஈட்டும் லாபம் 24,330 ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் இதுவே குறைந்தபட்ச லாபமாகும்.இதையடுத்து, நாட்டிலுள்ள உருக்கு நிறுவனங்களின் பங்கு விலையும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.குறிப்பாக, 'ஏ.பி.எல்., அப்பல்லோ டியூப்ஸ்' நிறுவன பங்கு விலை 8.89 சதவீதமும்; செயில் பங்கு விலை 7.40 சதவீதமும்; என்.எம்.டி.சி., பங்கு விலை 3.89 சதவீதமும்; 'ஜிண்டால் ஸ்டெயின்லெஸ்' பங்கு விலை 2.97 சதவீதமும்; 'டாடா ஸ்டீல்' பங்கு விலை 2.41 சதவீதமும் குறைந்துள்ளன.ஒட்டுமொத்தமாக கடந்த மாதத்தில் 'நிப்டி 50' குறியீடு 0.17 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், 'நிப்டி மெட்டல்' குறியீடு 1.01 சதவீதம் சரிந்துள்ளது. அதிகளவிலான உருக்கு இறக்குமதியே பங்குகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், இந்தியாவின் நிகர உருக்கு இறக்குமதி 57 சதவீதம் அதிகரித்து, 2.70 மெகா டன்னாக உள்ளது. அதே நேரத்தில், ஏற்றுமதி 46 சதவீதம் குறைந்து, 1.70 மெகா டன்னாக உள்ளது.குறிப்பாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கின் அளவு, 0.85 மெகா டன்னாக அதிகரித்துள்ளது. இது மொத்த இறக்குமதியில், 32 சதவீதமாகும். இந்நிலையில், வியட்நாமிலிருந்து மலிவான விலையில் அதிகளவிலான உருக்கு இறக்குமதி செய்யப்படுவதாக உள்நாட்டு உருக்கு உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இதுகுறித்தான பொருள் குவிப்பு தடுப்பு வரி தொடர்பான விசாரணை சமீபத்தில் துவங்கியுள்ளது. இதே போன்று சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்குக்கு எதிராகவும் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.