உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பின்னலாடை நல வாரியம் அமைக்க ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

பின்னலாடை நல வாரியம் அமைக்க ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை

சென்னை : பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பிரச்னைக்கும் விரைந்து தீர்வு காணவும், மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லவும், பின்னலாடை நல வாரியம் அமைக்குமாறு தமிழக அரசுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், 2,000 ஆடை ஏற்றுமதி நிறுவனங்களும், 20,000 சார்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன. இந்தியாவின் மொத்த பின்னாலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்கு, 54 சதவீதம். உள்நாட்டின் தேவையை திருப்பூர், 8 சதவீதம் பூர்த்தி செய்கிறது.

பல்வேறு பிரச்னை

பின்னலாடை உற்பத்தி என்பது நுாற்பாலை, துணி உற்பத்தி, சாய தொழில், அச்சடிப்பு, தையல், பேக்கேஜ் உட்பட எட்டு படிநிலைகளை உள்ளடக்கியது. இதுதவிர, ஆடைக்கான பட்டன், ஜிப், லேபிள், பேக் போன்ற உற்பத்தியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளளன. இந்த உற்பத்தி தொடர் சரியாக இயங்கினால் மட்டுமே தொழிலில் வளர்ச்சி இருக்கும். பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. அவற்றுக்கு தீர்வு காண, பின்னலாடை நல வாரியத்தை அமைக்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலர் குமார் துரைசாமி கூறியதாவது:மொத்தம், 2,000 ஏற்றுமதி நிறுவனங்களில், 5 - 7 சதவீத நிறுவனங்கள் மட்டுமே, அனைத்து உற்பத்தி தொடர்களையும் உள்ளடக்கி, ஒரே கூரையின் கீழ் செயல்படுகின்றன.மீதமுள்ள நிறுவனங்கள், ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கி வருகின்றன. ஒவ்வொரு நிறுவனத்திலும், தனிப்பட்ட மற்றும் அவற்றின் தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் இருக்கும். பெரிய நிறுவனங்கள், தங்களின் பிரச்னைகள் தொடர்பாக அரசை எளிதில் அணுக முடிகிறது.அதேசமயம், மற்ற படிநிலைகளில் உள்ள நிறுவனங்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து, பிரச்னைகளை தெரிவிக்க சிரமம் உள்ளது. ஆடை தயாரிப்பில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும், தங்களின் பிரச்னையை அரசுக்கு தெரிவிக்க கூடிய வகையில் பொதுதளம் ஒன்று இருப்பது அவசியம்.

தீர்வு காண வேண்டும்

பருத்தி சாகுபடி முதல் நுாற்பு வரை ஆடை தொழிலின் அனைத்து செயல்பாடுகள் வரை எதிர்கொள்ளும் அனைத்து பிரச்னைகளும், சரியான நேரத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, தீர்க்கப்பட வேண்டும்.இதற்காக, பின்னலாடை வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். அதில் வைக்கப்படும் கோரிக்கைகளை பரிசீலித்து, விரைந்து தீர்வு காண முடியும். அந்த வாரியம் வாயிலாக, மத்திய அரசின் கவனத்திற்கும் கோரிக்கைகளை எடுத்துச் செல்ல முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


துளிகள்

13 hour(s) ago  




அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை