உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / நஷ்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலை கைவிடும் விவசாயிகள் நஷ்டத்தால் தொழிலை கைவிடும் விவசாயிகள்

நஷ்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலை கைவிடும் விவசாயிகள் நஷ்டத்தால் தொழிலை கைவிடும் விவசாயிகள்

உடுமலை:தமிழகத்தில், பட்டுக்கூடு உற்பத்தி தொழில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால், இத்தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி, திண்டுக்கல், சேலம், ராசிபுரம், கிருஷ்ணகிரி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பட்டுக்கூடு உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. 22,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், புழு வளர்ப்பு மனைகள் அமைத்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர்.அரசு முட்டை வித்தகங்களிலிருந்து, முட்டை கொள்முதல் செய்யப்பட்டு, இளம் புழு வளர்ப்பு மனைகளில், ஏழு நாட்கள் வளர்த்த பட்டுப்புழுக்களை, விவசாயிகள் கொள்முதல் செய்கின்றனர். அதன்பின், புழு வளர்ப்பு மனைகளில், மல்பெரி இலைகளை உணவாகக் கொடுத்து, 21 நாட்கள் பராமரித்து, பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது, பல்வேறு சிக்கல்கள் காரணமாக, விவசாயிகள் பாதித்த நிலையில், அரசும் கண்டு கொள்ளாததால், இத்தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவதாக வேதனை தெரிவித்து உள்ளனர்.தமிழக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறியதாவது:முட்டை வித்தகத்திலிருந்து தரமற்ற முட்டை வினியோகம் காரணமாகவும், இளம்புழு வளர்ப்பு மனைகளை கண்காணிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாலும், விவசாயிகள் வாங்கி வளர்க்கும் புழுக்கள், சிறியதாகவும், மாறுபட்ட வடிவங்களில் வளர்வதாலும், பட்டுக்கூடு உற்பத்தி பெருமளவு பாதிக்கிறது.பட்டுக்கூடு உற்பத்தி, 100 முட்டை தொகுதிக்கு, 90 கிலோ வரை இருந்த நிலையில், பல்வேறு பாதிப்புகள் காரணமாக, 40 கிலோ மட்டுமே தற்போது உற்பத்தி செய்ய முடிகிறது.அதேபோல், ஒரு கிலோ பட்டுக்கூடு, 700 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், தற்போது, 350 முதல், 450 ரூபாய்க்கு மட்டுமே விற்கிறது. ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்ய, 600 ரூபாய் வரை செலவாகும் நிலையில், விவசாயிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்படுகிறது.இதனால், விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலிருந்து, வெளியேறி வருகின்றனர்.தேசிய அளவில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் தரத்தில், தமிழகம் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது வீழ்ச்சியை சந்தித்து, 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி