| ADDED : ஜூலை 26, 2024 12:47 AM
கோவை:''கோவை, திருப்பூர் தொழில்முனைவோர், ம.பி.,யில் தொழில் துவங்க முன்வர வேண்டும்; 30 நாட்களில் துவங்கலாம்; 200 சதவீத மானியம் வழங்கப்படும்,'' என, மத்திய பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.'மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவையில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில் ம.பி., முதல்வர் மோகன் யாதவ் பேசியதாவது:தமிழகத்தை நாட்டின் உற்பத்தி துறை கேந்திரமாக மாற்றியது கோவை, திருப்பூரின் பங்களிப்பு தான். தொழில் முனைவுத்திறன், அர்ப்பணிப்பு காரணமாக கோவை மற்றும் திருப்பூரை தென்னிந்தியாவின் துணி உற்பத்தி மையமாக மாற்றியுள்ளீர்கள். இதேபோல், ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் உற்பத்தில், கோவையை தமிழகத்தின் முக்கிய மையமாக மாற்றிஉள்ளீர்கள். ம.பி.,யில் ஜவுளித்துறைக்கு உகந்த சூழல் நிலவுகிறது. ஆட்டோமொபைல், இன்ஜினியரிங் துறைகள் வளர்ந்து வருகின்றன. ஜவுளித்துறையில் ம.பி., மிகப்பெரும் சந்தையாக உருவெடுத்துள்ளது. அங்கு தொழில் துவங்கினால், 200 சதவீத மானியம் வழங்குகிறோம். ம.பி.,யில் அபரிமிதமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவ்வாறு முதல்வர் பேசினார்.