| ADDED : ஜூலை 20, 2024 02:00 AM
புதுடில்லி:வரும் 2030ம் ஆண்டுக்குள், உள்நாட்டிலேயே 41.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்ய, இந்தியா இலக்கு நிர்ணயிக்க வேண்டும்; இதன் வாயிலாக, 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என, நிடி ஆயோக் தன் அறிக்கையில் தெரிவித்துஉள்ளது. நிடி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2016- - 17ம் ஆண்டில், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, 3.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது 2022 - ---23ல், 8.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது, ஸ்மார்ட்போன்களுக்காக இறக்குமதியை சார்ந்திருக்காமல், 99 சதவீத போன்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வருகிறது. ஒட்டுமொத்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி யில், ஸ்மார்ட்போன்கள் பங்களிப்பு, 43 சதவீதம்.'மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா' உள்பட பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்ட போதும், சர்வதேச சந்தையில், இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பங்களிப்பு வெறும் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது. எனவே எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வடிவமைப்பு, உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.