சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், தொழிற்பூங்கா வளாகத்தை விரிவாக்குவதற்காக, 27 ஏக்கர் நிலத்தை இ.எஸ்.ஆர்., குழுமம் வாங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிக அளவில் செயல்படுகின்றன. இங்கு பல்வேறு நிறுவனங்கள் நிலம் வாங்கி தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன. 125 ஏக்கர்
இதில் சில பெரிய நிறுவனங்கள் மொத்தமாக நிலங்களை வாங்கி, தொழிற்பூங்காக்களை ஏற்படுத்துகின்றன. இதில் கட்டடங்கள் கட்டி, அலுவலகம், தொழிற்சாலை, கிடங்கு போன்ற தேவைகளுக்கு வழங்கி வருகின்றன. இந்த வகையில், நாடு முழுதும் பல்வேறு நகரங்களில், ஆட்டோ மொபைல், சரக்கு போக்குவரத்து பணிகளுக்காக தொழிற்பூங்கா வளாகங்களை, இ.எஸ்.ஆர்., குழுமம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் சார்பில், ஒரகடத்தில், 125 ஏக்கர் தொழிற்பூங்கா ஒன்று உள்ளது. இதில், 17 கட்டடங்களில், 28 லட்சம் சதுர அடி பரப்பளவு பகுதி, பல்வேறு நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. பசுமை கட்டடங்களுக்கான தங்க ரேட்டிங் தரச்சான்றுடன் இந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், இந்த தொழிற்பூங்காவை விரிவாக்க இ.எஸ்.ஆர்., குழுமம் திட்டமிட்டது. கூடுதல் நிலம்
இதற்காக, ஏற்கனவே உள்ள வளாகத்தின் அருகில், 27 ஏக்கர் நிலத்தை இந்நிறுவனம் வாங்கிஉள்ளது. இதில் தொழிற்பூங்கா விரிவாக்க திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விரிவாக்கத்தால், இங்கு பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களுக்கு போதிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.