உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / முக்கிய நகரங்களில் ரூ.2,000 கோடியில் காய்கறி சந்தைகள் அமைக்க திட்டம்

முக்கிய நகரங்களில் ரூ.2,000 கோடியில் காய்கறி சந்தைகள் அமைக்க திட்டம்

புதுடில்லி:நாட்டின் முக்கிய நகரங்களில், இடைத்தரகர்கள் தலையீடின்றி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நுகர்வோருக்கு, நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், பிரமாண்ட காய்கறி சந்தைகள் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. மத்திய பட்ஜெட்டில், 'பெரிய நுகர்வு மையங்கள் அருகே பிரமாண்ட காய்கறி சந்தைகள் அமைக்கப்படும்; உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இவை துவங்கப்படும்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதன்படி, நாடு முழுதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், 50 காய்கறி சந்தைகளை அமைப்பதற்கான வரைவுத் திட்டத்தை வேளாண் அமைச்சகம் உருவாக்கி உள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர், திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.இத்திட்டத்தின் அடிப்படையில், புதுடில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களை ஒட்டி, 50 கி.மீ., சுற்றளவு தொலைவுக்குள், பிரமாண்ட காய்கறி சந்தைகள் அமைக்கப்படும். குளிர்பதனக் கிடங்கு வசதியுடன் கூடியதாக இவை இருக்கும். நுகர்வோர்கள், தங்கள் குடியிருப்பு அருகே சில்லரை விற்பனை அல்லது வேன்களில் வரும் காய்கறிகளை வாங்கி கொள்ளலாம்.இதன் வாயிலாக காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதுடன், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற அத்தியாவசிய காய்கறிகள் வினியோகம் சீராக இருப்பதும் உறுதி செய்யப்படும். மேலும், விவசாயிகளுக்கு உரிய விலையுடன், நுகர்வோருக்கு புதிய காய்கறிகள், நியாயமான விலையில் கிடைக்க வழி வகுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ