| ADDED : ஜூன் 06, 2024 02:33 AM
புதுடில்லி:பெரு நாட்டுக்கு, யு.பி.ஐ., எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பட்டுவாடா முறையை உருவாக்குவதற்காக, என்.பி.சி.ஐ.,யின் வெளிநாட்டு பிரிவுடன், 'ரிசர்வ் பேங்க் ஆப் பெரு' ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணபட்டுவாடா கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து என்.பி.சி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துஇருப்பதாவது: இந்தியாவின் என்.பி.சி.ஐ.,யின் யு.பி.ஐ., தொழில்நுட்பம் மற்றும் அதன் அனுபவங்களை பயன்படுத்தி, லத்தின் அமெரிக்க நாடான பெருவின் நிதி சூழலை நவீன மயமாக்குவதுடன், பெருவிற்கான யு.பி.ஐ., போன்ற உடனடி பட்டுவாடா முறையை உருவாக்க ஒப்பந்தம் கையெழுத்தாகிஉள்ளது.இதற்காக, என்.பி.சி.ஐ.,யின் வெளிநாட்டு பிரிவான என்.ஐ.பி.எல்., மற்றும் ரிசர்வ் பேங்க் ஆப் பெரு இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.மேலும், இந்த ஒப்பந்தம், பெருவின் டிஜிட்டல் நிதி சேவைகளை மேம்படுத்துவதையும், தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனை மற்றும் வணிக கட்டண பரிவர்த்தனை ஆகியவற்றை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.இந்த ஒப்பந்தம் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். உலகளவில் புகழ்பெற்றுள்ள நம் யு.பி.ஐ., தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட முதல் தென்அமெரிக்க நாடாக பெரு மாறியுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.