கடந்த மூன்று மாதங்களில், மூன்று மிகப்பெரிய முதலீடுகளை அண்டை மாநிலங்களிடம் தமிழகம் இழந்து நிற்கிறது. மாநில தொழில் துறை அமைச்சர், தனது பி.ஆர்., ஜாலங்கள், மேம்போக்கான மறுப்புகள், விளக்கங்களை அளித்தாலும், தமிழகத்தின் தொழில்துறை ராஜதந்திரம், அன்னிய நிறுவனங்களிடம் எச்சரிக்கை உணர்வை பதித்திருக்கிறது. ஆகஸ்ட் 2025ல், தென்கொரிய காலணி நிறுவனம் ஹுசியங், 1,720 கோடி ரூபாயை துாத்துக்குடியில் முதலீடு செய்து, ஆலை அமைப்பதாகவும், 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சமூக வலைதளத்தில் அமைச்சர் ராஜா அறிவித்தார். அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் போட்டியில் தமிழகம் இருக்கிறது என்ற அவரது சமிக்ஞையும், அதிக இளைஞர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் இரண்டு மாதங்களில் மாறிப்போனது. தமிழகத்துக்கு வரவில்லை, ஆந்திராவின் குப்பம் பகுதியில் ஆலை அமைக்கப்படும் என, நவம்பர் 14ல் அந்நிறுவனம் அறிவித்தது. உடனடி மறுப்பு தமிழக எல்லையோர ஆந்திர நகரம் மட்டுமல்ல குப்பம், அது அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபை தொகுதி. இந்த செய்தி வெளியானதும், நடைமுறைக்கு ஒவ்வாத சலுகைகளை வழங்குவதாக கூறி, முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தன்னை தாழ்த்திக்கொள்ளாது என்றார், அமைச்சர் ராஜா. நேரடியாக 20,000 வேலைவாய்ப்பு தருவதற்கு ஒப்பந்தம் செய்த ஒரு நிறுவனம், குறுகிய இடைவெளியில் வேறு மாநிலத்துக்கு இடம் மாறுவதற்கு, அவரது விளக்கத்தில் நியாயமான, வெளிப்படையான உண்மையோ, பதிலோ இல்லை. முன்னதாக, தைவானின் பாக்ஸ்கான் நிறுவனம், 14,000 பொறியியல் உயர்பதவி வேலைவாய்ப்புடன் தமிழகத்தில் கூடுதலாக 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போவ தாக அமைச்சர் தெரிவித்தார். உடனடியாக பொதுவெளியில் மறுத்த ஹுசியங் நிர்வாகம், அரசுடன் நடந்த சந்திப்பில் புதிய முதலீடு குறித்து பேசப்படவில்லை என்றது. இது, ஒரு போட்டியாளரால் அல்ல; முதலீட்டாளராகக் கருதப்பட்ட அதே நிறுவனத்தால் சுட்டிக்காட்டப்பட்டிருப்பது, சரிபார்க்கக்கூடிய உண்மைகளுக்கு முன்னால் திரித்துக்கூறும் சிக்கலான கலாசாரத்தை எடுத்துக் காட்டியது. இப்படிப்பட்ட மழுப் பலான, நம்பத்தகாத விளக்கம் அளிக்கும் நடைமுறை ஏற்கனவே வெளிப்பட்ட ஒன்றுதான். கூகுள் டேட்டா சென்டர் ஒப்பந்தம் கைநழுவி ஆந்திராவின் விசாகப்பட்டினத்துக்கு சென்றபோது, இது ஒரு புவியியல், அரசியல் மற்றும் துாதரக சிக்கல் எனக் கூறினார் அமைச்சர் ராஜா. எதிர்மறை சூழல் ஆனால், கூகுளிடம் சிறந்த முறையில் பேசி, அந்த ஒப்பந்தத்தை ஆந்திரா வென்ற நிலையில், அமைச்சரின் விளக்கம் அபத்தம் என வெட்டவெளிச்சமானது. குறுகிய காலத்தில், அடுத்தடுத்து மூன்று ஒப்பந்தங்களை அண்டை மாநிலங்களிடம் இழந்ததால், முதலீட்டாளர்கள் மத்தியில் எதிர்மறை சூழலை தமிழகம் எதிர்கொண்டுஉள்ளது. இது வெறும், தகவல் தொடர்பில் நிகழும் தவறுகள் தான், ஆனால், நம்பகத்தன்மையை அசைத்து பார்க்க கூடியவை. மாநிலத்தின் அமைச்சரே உண்மைகளை மிகைப்படுத்தியும் குறைத்து மதிப்பிட்டும் பேசுவது முதலீட்டாளர்களிடம் தவறான சமிக்ஞையை ஏற்படுத்தும். முதலீடுகள், வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் மாநிலங்களின் போட்டியில், தொலைநோக்கு மட்டுமின்றி, தொழில்நோக்குடனும் அணுகுகிறது ஆந்திரா. அதிக சலுகைகள், குறுகிய காலத்தில் அனுமதிகள், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுடன் தொழில் வளர்ச்சியை அது அணுகும்போது, சமூக வலைதள கிண்டல், கேலி செய்வதில் தமிழகம் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழகத்தின் உயர் தொழில்நுட்பம், துறைமுக வசதி, திறமையான தொழிலாளர்கள், மேலாண்மை நிபுணர்களின் ஆதாரம் ஆகியவற்றால், முதலீடுகளை ஈர்ப்பதில் அதன் கவர்ச்சியை மறுக்கவோ, சந்தேகிக்கவோ முடியாது. கைநழுவிய முதலீடுகள் ஆனால், அர்த்தமற்ற அரசியல் நகர்வுகள், பொருத்தமற்ற விளக்கங்கள் தரும் சிலரது நடவடிக்கைகளால் தேவையற்ற பெயர் பாதிப்பு ஏற்படுகிறது. தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் பிற மாநிலங்களுக்கு இடம் மாறுவது அனைவருக்கும் கண்கூடாக தெரியும். எனவே, அரசியல்ரீதியான அரைகுறை விளக்கங்கள், உண்மையான நல்ல வாய்ப்புகளை எப்படி வீணாக்கும் என்பதற்கான எச்சரிக்கையாக தமிழகம் மாறியுள்ளது. தமிழகத்தின் திறன்மிகு இளைஞர்கள், அதிக வேலைவாய்ப்புகளை பெறவும் அதிக அன்னிய முதலீடுகள் வாயிலாக மாநிலம் வளர்ச்சி அடையவும், 'புரொபஷனல் அப்ரோச்' அவசியம் என்பதையே சமீபத்தில் கைநழுவிய பெருமுதலீடுகள் காட்டுகின்றன. தமிழகத்தின் தொழில்துறை மீதான நன்மதிப்பு, அண்மை காலத்தில் சரிந்திருக்கிறது. இதற்கு, திறமையின்மையோ, கட்டமைப்பு வசதிக்குறைவோ காரணமல்ல, அரசியல் தான்