| ADDED : ஜன 04, 2024 12:23 AM
புதுடில்லி : ஆசியாவின் முதல் 'ஹைப்பர்லுாப்' சோதனை தடத்தை உருவாக்குவதற்காக, 'ஆர்சிலார் மிட்டல்' நிறுவனம், மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.ஹைப்பர்லுாப் என்பது, பயணிகள் மற்றும் சரக்குகளுக்கான அதிவேக தரைவழி போக்குவரத்து அமைப்பாகும். இது சற்று ரயிலை போன்றது, ஆனால் குறைந்த அல்லது காற்று அல்லாத குழாய்க்குள் இயங்கும்.இதுவரை, இந்தியாவிலோ அல்லது ஆசியாவிலோ ஹைப்பர்லுாப் வசதி எங்கும் உருவாக்கப்படவில்லை. ஆனால், தற்போது இதற்கான சோதனை தடம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், மெட்ராஸ் ஐ.ஐ.டி., மற்றும் ஆர்சிலார்மிட்டல் நிறுவனம் இணைந்துள்ளன.உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஆர்சிலார் மிட்டல் மற்றும் ஆர்சிலார் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா, இந்த ஹைப்பர்லுாப் சோதனை தடத்துக்கு தேவையான உருக்கு பொருட்கள், அவற்றின் வடிவமைப்பு, பொறியியல் உள்ளிட்டவற்றை மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யின், இரு ஹைப்பர்லுாப் குழுக்களுக்கு வழங்க உள்ளது. இந்த சோதனை தடம், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யின் டிஸ்கவரி கேம்பஸில் அமைய உள்ளது. இங்கு 400 மீட்டர் வெற்றிட குழாய் அமைப்பதற்காக, 400 டன் உருக்கை ஆர்சிலார்மிட்டல் நிறுவனம் வழங்க இருப்பதாகவும், இது நடப்பு காலாண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனை தடத்தை உருவாக்கும் முயற்சியில், மெட்ராஸ் ஐ.ஐ.டி., உடன் ஆர்சிலார் மிட்டல் நிறுவனம் இணைந்துள்ளது