| ADDED : பிப் 29, 2024 11:27 PM
புதுடில்லி,:கடந்த ஜனவரி மாத இறுதியில், நாட்டின் நிதி பற்றாக்குறை, பட்ஜெட் மறு மதிப்பீட்டு இலக்கில் 63.60 சதவீதத்தை எட்டியதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.80 சதவீதம், அதாவது 17.35 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி இறுதியில், நிதி பற்றாக்குறை, 11 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இதே காலகட்டத்தில் அரசின் மொத்த வருவாய் 22.52 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது பட்ஜெட் மறு மதிப்பீட்டு இலக்கில் 81.70 சதவீதமாகும். இதில் 18.80 லட்சம் கோடி ரூபாய் நிகர வரி வருவாய்; 3.38 லட்சம் கோடி ரூபாய் வரி அல்லாத பிற வருவாய்; 34,219 கோடி ரூபாய் திரும்பப்பெறப்பட்ட கடன் மற்றும் இதர மூலதன வருவாய் ஆகும். கடந்த ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், மத்திய அரசின் மொத்த செலவினம் 33.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது பட்ஜெட் மறு மதிப்பீட்டு இலக்கில் 74.70 சதவீதமாகும். இதில் 8.22 லட்சம் கோடி ரூபாய் வட்டி பேமென்ட்களுக்காகவும்; 3.15 லட்சம் கோடி ரூபாய் மானியத்துக்காகவும் செலவிடப்பட்டது. இதில் 26.33 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும், 7.20 லட்சம் கோடி ரூபாய் மூலதன கணக்கிலும் அடங்கும். இந்த காலகட்டத்தில் மொத்தம் 8.20 லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்மானமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டு இதே கால்கட்டத்தில் வழங்கியதை விட 1.52 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.