| ADDED : ஆக 20, 2024 02:48 AM
புதுடில்லி:கடந்த ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில், அரிசி, காபி கொட்டை, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், கடல் உணவுப் பொருட்கள், நகைகள், பருத்தி நுால் மற்றும் கைத்தறி பொருட்கள் உள்ளிட்ட முக்கியமான 30 பொருட்களின் ஏற்றுமதி சரிந்து உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வகை பொருட்களின் ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில் உயர்ந்த போதிலும், அளவின் அடிப்படையில் சரிந்துள்ளது.கடந்தாண்டு ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் 10.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இப்பொருட்களின் ஏற்றுமதி, நடப்பாண்டு இதே காலகட்டத்தில் 11.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. எனினும், இந்த 30 பொருட்களில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஜூலையில் 12 பொருட்களின் ஏற்றுமதி சரிந்துள்ளது. ஜூனில் ஒன்பது பொருட்களின் ஏற்றுமதியும்; மே மாதத்தில் 10 பொருட்களின் ஏற்றுமதியும்; ஏப்ரலில் 17 பொருட்களின் ஏற்றுமதியும் சரிந்துள்ளது. கடந்தாண்டு ஜூலையில் 2.71 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இப்பொருட்களின் ஏற்றுமதி, நடப்பு ஜூலையில் 2.64 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, சரக்கு ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசம், அதாவது வர்த்தக பற்றாக்குறை, 1.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மின்னணுவியல், பொறியியல் மற்றும் மருந்து பொருட்களின் ஏற்றுமதி மட்டும் அதிகரித்துள்ளது.