சென்னை: தமிழகத்தில் பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு, 7 சதவீதம் முதல், 12 சதவீதம் வரை மூலதன மானியம், சலுகை விலையில் நிலம், மின்சார வரியில் இருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளுடன் கூடிய தொழில் ஊக்குவிப்பு கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. உலகம் முழுதும் குழந்தைகள் விரும்பும் பொருளாக பொம்மைகள் உள்ளன. உலகளவில் பொம்மைகள், குழந்தைகள் விளையாட்டு பொருட்களுக்கான சந்தை மதிப்பு தற்போது, 15.50 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது வரும், 2030ல், 23 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. சிறப்பு சலுகைகள் நம் நாட்டில் இந்த துறையின் சந்தை மதிப்பு, 14,600 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. எனவே, தமிழகத்தில் பொம்மை, பொழுதுபோக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்க்க, சிறப்பு சலுகைகள் உடைய, தமிழக பொம்மை உற்பத்தி கொள்கை - 2025ஐ வெளியிட்டுள்ளது. இதை, மதுரையில் நேற்று முன்தினம் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த கொள்கையின் கீழ், 50 கோடி ரூபாய் முதலீடு மற்றும் குறைந்தது, 50 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்படும். மூலதன மானியம் அதன்படி, 500 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு, 7 சதவீதமும், 300 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு, 10 சதவீதம் - 12 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும் என, பொம்மை தயாரிப்பு ஊக்குவிப்பு கொள்கையில் கூறப்பட்டுஉள்ளது. மானியங்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மாதம் 4,000 ரூபாய் பெண்கள், திருநங்கைகள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு தலா 6,000 ரூபாய் வடிவமைப்பு பயிற்சிக்கு மாதம் 10,000 ரூபாய் சர்வதேச தரச்சான்று பெறும் செலவில் 50% காப்புரிமை பெறும் செலவில் 50%பொம்மைகள், குழந்தைகள் விளையாட்டு பொருள் சந்தை, 2025ல் 15.50 லட்சம் கோடி ரூபாய் ; 2030ல், 23 லட்சம் கோடி ரூபாயாக உயரும் 'சிப்காட்' பூங்காவில், 10 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை சலுகை விலையில் மனைகள்; பதிவு கட்டணம் விலக்கு மின்சார வரி, 5 ஆண்டுகளுக்கு விலக்கு; எம்.எஸ்.எம்.இ.,களுக்கு தனியே மூலதன மானியம், ஊதிய மானியம்