புதுடில்லி: 'ராணுவ தளபதி வி.கே.சிங், 1950ம் ஆண்டை தன்னுடைய பிறந்த ஆண்டாக ஒப்புக்கொண்டுள்ளார்' என, ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராணுவ தளபதியின் பிறந்த ஆண்டு 10.5.1950 என்றும், 1951ம் ஆண்டு என்றும் கூறப்பட்டு வந்தது. இதனால், அவர் ஓய்வு பெறும் ஆண்டு எப்போது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. சட்டத்துறை அமைச்சகம், அட்டர்னி ஜெனரல் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின், இவரது பிறந்த ஆண்டு 10.5.1950 என, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 10 மாதங்களுக்கு முன்பாகவே, 2013ல் இவர் ஓய்வு பெற உள்ளார். இது குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ராணுவ அமைச்சகத்தைச் சிலர் கேள்வி கேட்டிருந்தனர். இதற்குப் பதிலளித்துள்ள ராணுவ அமைச்சகம், 'ராணுவ தளபதி தன்னுடைய பிறந்த தேதியில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, கடந்த 2008ம் ஆண்டே, பிறந்ததேதியை 10.5.1950 என ஒப்புக்கொண்டு விட்டார். இதை அவர் தன் கைப்படவே, தன்னிச்சையாக எழுதிக் கொடுத்துள்ளார்' என, தெரிவித்துள்ளது. ராணுவ தளபதி வி.கே.சிங்கின் பள்ளிச் சான்றிதழில் ,10.5.1951 என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதை பரிசீலிக்க வேண்டும் என, பொது தொடர்புத் துறை கூடுதல் டைரக்டர் ஜெனரல், ராணுவ அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். இதை, ராணுவ அமைச்சகம் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.