உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரே ஓட்டுச்சாவடியில் ஒரே குடும்பத்தின் 90 பேர்

ஒரே ஓட்டுச்சாவடியில் ஒரே குடும்பத்தின் 90 பேர்

 சிக்கபல்லாபூர் நகரின், வார்டு எண் 19ல் வசிக்கும் பாதாம் என்பவரின் குடும்பம் மிகவும் பெரியது. இவரது குடும்பத்தை சேர்ந்த 90 உறுப்பினர்கள், நேற்று சிக்கபல்லாபூரின், ஓட்டுச்சாவடி எண் 161ல் ஓட்டு போட்டனர். சாம்ராஜ்நகரின், சன்னேகாலா கிராமத்தின் ஓட்டுச்சாவடியில் நேற்று காலை ஓட்டு போட வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது இந்திய தேசிய பறவையான மயில், ஓட்டுச்சாவடிக்கு வந்தது. சிறிது நேரம் வாக்காளர்களை நோட்டம் விட்டு, அங்கும், இங்கும் நடமாடிய பின் அங்கிருந்து பறந்து சென்றது. சாம்ராஜ்நகரின், ராமசமுத்ராவில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் கலைஞர்கள் தம்புரா, மத்தளம், தம்பட்டை வாத்தியங்கள் வாசித்து, வாக்காளர்களை வரவேற்று அழைத்து சென்றனர். இது வாக்காளர்களின் உற்சாகத்தை அதிகரித்தது. துமகூரின் திப்டூரை சேர்ந்த டாக்டர் ஸ்ரீதர், இங்குள்ள ஓட்டுச்சாவடிக்கு குதிரையில் ஏறி வந்து ஓட்டு போட்டது, அனைவரையும் கவர்ந்தது. சித்ரதுர்கா லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட செல்லகரேயின் ஹெட்பனஹள்ளி ஓட்டு சாவடியில் தேர்தல் பணியில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி யசோதம்மா, 55 ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துமகூரு நகர் எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரமேஷ், 54. துணி வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று காலை தனது மனைவியுடன் ஓட்டு போட்டு விட்டு வீடு திரும்பினார். சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ