உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே!

மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே!

கர்நாடக காங்கிரசில் அசைக்க முடியாத தலைவராக வலம் வரும் துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ். மூன்று முறை பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர்.எம்.பி.,யாக இருந்த போது, கர்நாடக காங்கிரசில் முக்கிய முடிவுகளை எடுப்பதில், முக்கிய பங்கு வகித்து வந்தார். அண்ணனுக்கு நிகராக செல்வாக்கு மிகுந்த நபராக இருந்தார்.

அதீத முயற்சி

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், சுரேஷ் படுதோல்வியை சந்தித்தார். தம்பியை வெற்றி பெற செய்வதற்கு, சிவகுமாரும் அதீத முயற்சி செய்தும் பலனின்றி போனது. அரசியலுக்கு புது முகமான பா.ஜ., சார்பில் போட்டியிட்ட மஞ்சுநாத் அபார வெற்றி பெற்றார்.தேர்தல் முடிவுகள் வெளியான பின், சில நாட்கள், பொது இடங்களில் சுரேஷை பார்க்க முடிந்தது. கடந்த இரண்டு மாதங்களாக, கட்சி பணியில் ஈடுபாடு இல்லாமல் உள்ளார். எம்.பி.,யாக இருந்த போது, எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாரோ, அதே அளவுக்கு தற்போது அமைதியாக இருக்கிறார்.பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். 'மக்கள் ஓய்வு கொடுத்துள்ளதால், ஓய்வில் உள்ளேன்' என்று தன் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால், முன்பை போல் சுறுசுறுப்பாக இருந்தால் தான், எங்களுக்கு கவுரவம் இருக்கும் என்று ஆதரவாளர்கள், அவரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.தம்பியின் இந்த நிலைமையை பார்த்து, அவருக்கு ஏதாவது முக்கிய பதவி தருவதற்கு, அண்ணன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், விரைவில் சுரேஷுக்கு முக்கிய பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.இதற்கிடையில், 'அவர் அமைதியாக இருப்பதே தங்களுக்கு நல்லது' என்று காங்கிரசின் சில தலைவர்கள் முணுமுணுத்து வருகின்றனர். இதன் மூலம், தமது அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் யோசிக்கின்றனர்.

அதிருப்தி

இந்நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்தாலும், தொகுதியில் உலா வந்து பிரமுகர்களை சந்திக்க, சுரேஷ் ஆலோசித்து வருகிறாராம். இல்லை என்றால் பிரமுகர்கள் அதிருப்தி அடைய வாய்ப்பு உள்ளதாக அவர் நினைக்கிறார். எனவே, அண்ணன் சிவகுமாருடன் ஆலோசனை நடத்தி, அவர் அறிவுரையின்படி, அடுத்தகட்ட அரசியல் நகர்வை முன்னெடுத்தி செல்வதற்கு திட்டமிட்டுள்ளார்.மேலும், தன் தோல்விக்கு காரணமான கட்சியின் சில பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் பட்டியல் தயார் செய்து வைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ