உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரமேஷ் ஜார்கிஹோளி தொகுதியில் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன்

ரமேஷ் ஜார்கிஹோளி தொகுதியில் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன்

பெலகாவி: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியின், கோகாக் தொகுதியில் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன்,'' என்று, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அறிவித்து உள்ளார்.பெலகாவி கோகாக் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி. இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர். ரமேஷுக்கும், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கும் கடந்த 2019ல், பெலகாவி நில வள வங்கி தேர்தல் தொடர்பாக, மனஸ்தாபம் ஏற்பட்டது. லட்சுமி ஹெப்பால்கருக்கு ஆதரவாக, துணை முதல்வர் சிவகுமார் செயல்பட்டதால், ரமேஷ் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.,வில் இணைந்தார். மேலும் 16 எம்.எல்.ஏ.,க்களை தன்னுடன் அழைத்து சென்று, ஆட்சியை கவிழ்த்து விட்டார்.

அழுத்தம் இருக்கும்

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் லட்சுமியை தோற்கடிக்க, ரமேஷ் எவ்வளவோ முயன்றார். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் லோக்சபா தேர்தலில், பெலகாவி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, லட்சுமியின் மகன் மிருணாளை தோற்கடிக்க, ரமேஷ் முயற்சி செய்கிறார்.இந்நிலையில், பெலகாவியில் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் நேற்று அளித்த பேட்டி:தேர்தல் நேரத்தில் தந்திரம் செய்து, எதிராளியை தோற்கடிப்பது அரசியலில் இருக்க தான் செய்யும். பசவண்ணர், அம்பேத்கர் கொள்கையுடன் தேர்தலை சந்திக்கிறோம். எனது சகோதரர் சன்னராஜ் ஹட்டிகோளியை, எம்.எல்.சி., தேர்தலில் தோற்கடிக்க, ஒரு சிலர் முயற்சி செய்தனர்.என்னையும் தோற்கடிக்க முயற்சி நடந்தது. இப்போது எனது மகனை தோற்கடிக்க பார்க்கின்றனர். ஆனால் மக்களை நான் நம்புகிறேன். எனக்கு கண்டிப்பாக அழுத்தம் இருக்கும்.

ராம பக்தை

பெலகாவி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கோகாக் உட்பட எட்டு சட்டசபை தொகுதிகளிலும், நான் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன். பெலகாவி பா.ஜ., கோட்டை. இந்த மாவட்ட மக்கள் ஹிந்துத்வாவை கடைப்பிடிக்கின்றனர் என்று, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். நான் ஹிந்து இல்லையா. நானும் ராம பக்தை தான். எனது வீட்டிலும் சாமி படங்கள் உள்ளன. மக்களை உணர்வுபூர்வமாக துாண்டிவிடும் எண்ணம் எனக்கு இல்லை.பெலகாவியில் மிருணாளை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியிடம் கொடுக்கப்பட்டு உள்ளது. சிக்கோடியில் அவரது மகள் பிரியங்காவை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது. நானும், சதீஷ் ஜார்கிஹோளியும் இணைந்து செயல்படுவோம். இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட இளைஞர்கள், பெண்களுக்கு காங்கிரஸ் அதிக வாய்ப்பு கொடுத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை