உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாத்ரஸ் பலிக்கு காரணமான முக்கிய குற்றவாளிக்கு சல்லடை

ஹாத்ரஸ் பலிக்கு காரணமான முக்கிய குற்றவாளிக்கு சல்லடை

ஹாத்ரஸ், உத்தர பிரதேசத்தில், 121 பேர் பலியாக காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி தேவ்பிரகாஷ் மதுக்கர் மற்றும் சாமியார் போலே பாபா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.உ.பி.,யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில், கடந்த 2ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சுராஜ்பால் என்கிற போலே பாபா என்பவர் இந்த சொற்பொழிவில் பங்கேற்று பேசினார். இதில், 80,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில், 2.50 லட்சம் பேர் திரண்டனர். சாமியார் புறப்படும் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி, அடிபட்டும், மிதிபட்டும், மூச்சு திணறியும் 121 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள்.இந்த விவகாரம் தொடர்பாக, சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த தலைமை ஏற்பாட்டாளர் தேவ்பிரகாஷ் மதுக்கர் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாத ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், சொற்பொழிவு நடத்திய போலே பாபா குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள போலே பாபா, தேவ்பிரகாஷ் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.உ.பி., முழுதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ராஜஸ்தான், ஹரியானாவிலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது.சம்பவ இடத்துக்கு சென்ற சிறப்பு விசாரணை படை, ஹாத்ரஸ் கலெக்டர் ஆசிஷ் குமார், போலீஸ் எஸ்.பி., நிபுன் அகர்வால், மூத்த சுகாதாரத்துறை அதிகாரிகளின் வாக்குமூலத்தை பெற்று, அரசுக்கு ரகசிய அறிக்கை தாக்கல் செய்துள்ளது.மேலும், இந்த சம்பவத்தில் வேறு சதி இருக்கிறதா என்பது குறித்து நீதி விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று நபர் அடங்கிய குழுவை மாநில அரசு நியமித்துள்ளது.

ராகுல் நேரில் ஆறுதல்!

நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது வேதனைக்குரிய விஷயம். இதை அரசியலாக்க விரும்பவில்லை. எனினும், நிர்வாக குறைபாடுகள் உள்ளன. உயிரிழந்தோர் அனைவருமே ஏழைகள். அவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதுவும் தாமதமின்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.100 கோடி சொத்து

கடந்த 2000ம் ஆண்டில் ஆக்ராவில் நடந்த ஒரு வழிபாட்டு கூட்டத்தில், உடல்நலம் குன்றி இறந்ததாக கூறப்பட்ட ஒரு பெண்ணை மீண்டும் உயிர்த்தெழ வைத்ததாக போலே பாபா குறித்த செய்திகள் உ.பி., முழுதும் பரவின. இதையடுத்து, அவரது செல்வாக்கு உயர்ந்தது. உ.பி.,யின் கஸ்கான்ச் பகுதியில், 13 ஏக்கரில், அவருக்கு பிரமாண்டமான சொகுசு ஆசிரமம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள வசதிகள் இங்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர, நாடு முழுதும், 100 கோடி ரூபாய் மதிப்புக்கு அவருக்கு சொத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி