உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்நிவாஸ் - ஆம் ஆத்மி இடையே தொடரும் பனிப்போர் உச்சகட்டம்

ராஜ்நிவாஸ் - ஆம் ஆத்மி இடையே தொடரும் பனிப்போர் உச்சகட்டம்

மாநகராட்சிக்கு 10 கவுன்சிலர்களை நியமிக்கும் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, துணை நிலை கவர்னர் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இடையேயான 'பனிப்போரை' தீவிரப்படுத்தியுள்ளது.டில்லி மாநகராட்சி கவுன்சிலிற்கு 10 கவுன்சிலர்களை நியமிக்க, துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை 15 மாதங்களுக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை வழங்கியது.மாநகராட்சிக்கு 10 கவுன்சிலர்களை நியமிக்கும் முன்பு, அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி துணை நிலை கவர்னர் செயல்பட உத்தரவிட வேண்டும் என்ற டில்லி அரசின் மனுவை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்த்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இந்த விவகாரம் குறித்து மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வழிமுறைகளை ஆம் ஆத்மி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியானது. இதற்கு பதிலடியாக துணைநிலை கவர்னர் அலுவலகம், மறைமுகமாக கண்டித்து, பொதுநலனில் கவனம் செலுத்தும்படி அறிவுரை வழங்கியுள்ளது.டில்லி மாநகராட்சியில், மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. 2022ல் நடந்த மாநகராட்சித் தேர்தலில் 134 வார்டுகளை ஆம் ஆத்மி வென்றது. 104 இடங்களில் பா.ஜ.,வும் ஒன்பது இடங்களில் காங்கிரஸ் கட்சியும் வென்றன.மாநகராட்சிக்கு 10 கவுன்சிலர்களை துணை நிலை கவர்னர் நியமிப்பதனால், நிலைக்குழுவில் பா.ஜ.,வின் கை ஓங்கும் என, ஆம் ஆத்மி அஞ்சுகிறது. அதனால் தான் நினைத்ததை செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதே அக்கட்சியின் கவலை.ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கால் கடந்த 1.5 ஆண்டுகளாக நிலைக்குழுவுக்கு தேர்தல் நடத்தப்படாமல், முடங்கியுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதால் மாநகராட்சியில் சுறுசுறுப்பு தென்படுகிறது.

மேல்முறையீடு குறித்து ஆம் ஆத்மி ஆலோசனை

விக்ரம் நகர், ஆக. 8-டில்லி மாநகராட்சி கவுன்சிலிற்கு 10 கவுன்சிலர்களை துணை நிலை கவர்னர் நியமிக்கும் அதிகாரம் குறித்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆம் ஆத்மி ஆலோசித்து வருகிறது.இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான ராஜ்யசபா எம்.பி.,யான சஞ்சய் சிங் கூறியதாவது:தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை புறக்கணிக்கும் உரிமையை, துணை நிலை கவர்னருக்கு வழங்குவதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.இந்தத் தீர்ப்பு நாட்டிற்கு நல்லதல்ல. இது ஒரு அரசியலமைப்பு பிரச்னை. நம் நாட்டின் ஜனநாயக அமைப்பை இந்த தீர்ப்பு குழிபறிக்கிறது. எங்கள் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது நாட்டிற்கு நல்லதல்ல.தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்வது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக சட்டக் கருத்தை கேட்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

'எம்.சி.டி.,யை வேண்டுமென்றே முடக்கியது ஆம் ஆத்மி'

சிவில் லைன்ஸ், ஆக. 8-துணைநிலை கவர்னர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை:நியமன கவுன்சிலர்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் டில்லி மாநகராட்சி விரைவாக மேற்கொள்ளும்.நிலைக்குழுவை அமைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் விரைவுபடுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு குழுக்களை அமைக்கும் செயல்முறைகள் கடந்த 19 மாதங்களாக நிலுவையில் உள்ளன.அர்த்தமற்ற வழக்குகளில் டில்லி அரசு சிக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தது மட்டுமல்லாமல், மாநகராட்சியை ஆம் ஆத்மி அரசு வேண்டுமென்றே முடக்கியது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிகாரத்தில் உள்ள அரசாங்கமும் அதன் தலைவர்களும் ஆன்மாவைத் தேடுவதற்கும் சுயபரிசோதனை செய்வதற்கும் வாய்ப்பு அளித்துள்ளது. பொதுநலனே முதன்மையானது. அதை வீண் சண்டைகளால் தியாகம் செய்ய முடியாது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிலைக்குழு தேர்தல் எப்போது?

டில்லி மாநகராட்சிக்கு நிலைக்குழுத் தேர்தல் உடனடியாக நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து மூத்த மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. தீர்ப்பை ஆராய்ந்து, அதில் என்ன கூறுகிறது என்பதை ஆய்வு செய்வோம். அதன் அடிப்படையில் 18 பேர் கொண்ட நிலைக்குழு தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.நிலைக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேதிகளை அறிவிக்கும் கோப்பு, மேயருக்கு அனுப்பப்படும். தேர்தலை நடத்துவதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கான செயல்முறையின் படி, தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகளை மாநகராட்சியின் செயலர் சிவபிரசாத் கேவிக்கு மேயர் ஷெல்லி ஓபராய் வழங்குவார்.பின்னர் தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்காக கமிஷனர் அஸ்வனி குமாருக்கு கோப்பு அனுப்பப்படும். இறுதியாக, தேர்தல் தேதிகள் நகராட்சி செயலரால் அறிவிக்கப்படும்.முதலில் வார்டு கமிட்டிகளுக்கான தேர்தலை மண்டல அளவில் நடத்தி, ஒவ்வொரு நிலைக்குழுவிற்கு 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் ஆறு உறுப்பினர்களை ஓட்டளித்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ