உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 8.2க்கு உயர்ந்துட்டோம்!

8.2க்கு உயர்ந்துட்டோம்!

புதுடில்லி : கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கு சற்று அதிகமாக இருக்கும் என பல அமைப்புகள், நிறுவனங்கள் கணித்து அறிவித்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத அளவில் 8.20 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டியுள்ளது. இதையடுத்து, உலகின் மிக வேகமாக வளரும் நாடாக இந்தியா தன்னை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பை, தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்டது.அதில், 2023 - 24 நிதியாண்டின் நான்காம் காலாண்டில், வளர்ச்சி 7.80 சதவீதமாக இருந்தது என்றும், கடந்த முழு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 8.20 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. முந்தைய 2022 - 23ம் நிதியாண்டில் வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக புள்ளியியல் அலுவலகம் மேலும் தெரிவித்துஉள்ளதாவது: இந்த அளவுக்கு வளர்ச்சியை எட்டுவதற்கு, தயாரிப்புத் துறையின் சிறப்பான செயல்பாடுகளே முக்கிய காரணமாகும். மதிப்பின் அடிப்படையில், நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, நான்காம் காலாண்டில் 47.24 லட்சம் கோடி ரூபாயாகவும்; ஒட்டுமொத்த நிதியாண்டில் 173.82 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இது முறையே 43.84 லட்சம் கோடி ரூபாயாகவும்; 160.71 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Rajarajan
ஜூன் 01, 2024 06:24

உண்மை தான். வாழ்த்துக்கள். இதற்கு நீங்கள் யாருக்கு நன்றி செலுத்த வேண்டும் ?? வியர்வையை ரத்தமாய் சிந்தும் விவசாயிகள் / தனியார் ஊழியர்கள் / சிறு / குறு மற்றும் நடுத்தர நிறுவன தலைவர்கள். இதில் அரசு ஊழியருக்கு எந்த ஒரு பங்கும் இல்லை சேவை துறைகள் தவிர. ஆனால் மேற்சொன்ன இவர்களுக்கு, எந்த ஒரு அரசும் கொடுக்கும் சன்மானம் என்ன ? விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்ற சக்கையை தொடர்ந்து பிழியும் நிலை தான். ஆனால், நஷ்டத்தில் இயங்கும் / தேவையற்ற பொதுத்துறை மற்றும் அரசு துறை ஊழியருக்கு மட்டும், எப்போதும் எந்த அரசு வந்தாலும், ஜாக்பாட் தான். எப்படி ?? ஊதிய உயர்வு, பஞ்சபடி, சலுகைகள், ஓய்வூதியம் மற்றும் அதிலும் பஞ்சபடி. கிராமத்து பழமொழியின்படி, தேனை எடுப்பவர் ஒருவர், அதை ருசிப்பவர் ஒருவர். அதுசரி, இந்த பத்து ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியும், அல்லது பதவிக்கு வர துடிக்கும் காங்கிரஸ் கூட, இந்த விஷயத்தில் போட்டிபோட்டு தானே அரசு / பொதுத்துறை ஊழியருக்கு வாரி வாரி வழங்குகிறது. இந்த இரு கட்சிகளுமே, இந்த தேவையற்ற / நஷ்டத்தில் இயங்கும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை மூடுவது பற்றி வாய் திறக்காதது ஏன் ?? இதில் ஒரு மூடத்தனம் என்னவெனில், அத்தி பூத்தாற்போல் வாய்திறக்கும் திரு. மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கூட, தாங்கள் தான் தனியார்மயம் மற்றும் தாராளமயத்திற்கு காரணம் என்று உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுப்பது தான். இதை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல வேண்டிய பா.ஜ.க. வாய் மூடி மௌனியாக இருப்பது என்பது, இரண்டு கட்சிகளும் அரசியல் தான் செய்கின்றனர், நிர்வாகம் செய்ய விருப்பமில்லை என்பது தான் காரணம். அப்படியெனில், இந்த நஷ்டங்களை எப்படி தொடர்ந்து ஈடுசெய்வது ?? அட, அந்த கவலை எல்லாம் இவர்களுக்கு எதற்கு. இருக்கவே இருக்கிறார்கள் திருவாளர் தனியார் ஊழியர். அவர்கள் தலையில் போடு வரியை, உயர்த்து விலையை. யாரோ கஷ்டப்படட்டும், நாம் பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிப்போம். நிர்வாகமாவது, வெங்காயமாவது, அட போயா உன் வேலையே பார்த்துக்கொண்டு என்று சொல்வது என் காதில் விழுகிறது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை