புதுடில்லி, : பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தேர்வு எழுதியதாக யு.பி.எஸ்.சி., வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சிவில் சர்வீசஸ் தேர்வில் அவர் பெற்ற தேர்ச்சியை ரத்து செய்வது குறித்தும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.மஹாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேத்கர். கடந்த 2022ல் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், 2023ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான பயிற்சியை முடித்தார். அதன்பின், மஹாராஷ்டிராவின் புனே கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.அப்போது, அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தி வந்த, 'ஆடி' சொகுசு காரில் விதிமுறையை மீறி சிவப்பு - நீல நிற சுழல் விளக்கை பயன்படுத்தினார். காரில் மஹாராஷ்டிரா அரசு என்ற பலகையை பயன்படுத்தினர்.மேலும், பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு வழங்கப்படாத சலுகைகளையும், வசதிகளையும் வழங்கும்படி கலெக்டர் அலுவலக பணியாளர்களை நிர்ப்பந்தித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, வாஷிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.பூஜா கேத்கர் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் மற்றும் உடல்நல குறைபாடு தொடர்பான சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி சலுகை பெற்றதாகவும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.இது தொடர்பாக விசாரிக்க, மத்திய அரசுப் பணியாளர்கள் நலத்துறை கூடுதல் செயலர் மனோஜ் குமார் திவேதி தலைமையில் கடந்த 11ம் தேதி விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:பூஜா கேத்கரின் நடத்தை குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அவர் செய்துள்ள பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.தன் பெயர், தந்தை - தாய் பெயர்கள், புகைப்படம், கையொப்பம், இ - மெயில் முகவரி, மொபைல் போன் எண், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி, தேர்வு விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி பல்வேறு முறை அவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.மேலும், அவரது ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியை ரத்து செய்வது, வரும் காலங்களில் நடக்கும் தேர்வுகளை எழுதுவதில் இருந்து அவருக்கு தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.