சித்ரதுர்கா : சித்ரதுர்காவில் நேர்ந்த இரண்டு விபத்துகளில் குழந்தை உட்பட, ஆறு பேர் பலியாகி உள்ளனர்.சித்ரதுர்கா அருகே மதகரிபுரா கிராம பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஒரு கார் சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தறிகெட்டு ஓடியது. முன்னாள் சென்று கொண்டு இருந்த, டேங்கர் லாரியின் பின்பகுதியில் கார் சொருகியது. விபத்து நடந்ததும் லாரியை டிரைவர் நிறுத்தினார். காரின் இடிபாடுகளில் சிக்கி, ஆறு பேர் உயிருக்குப் போராடினர்.அங்கு வந்த சித்ரதுர்கா ரூரல் போலீசார், கிராம மக்கள் உதவியுடன், காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி, குழந்தை உட்பட மூன்று பேர் இறந்தது தெரியவந்தது. மற்ற மூன்று பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விசாரணையில் உயிரிழந்தவர்கள், பெங்களூரின் நிர்மலா, 55, வினுதா, 40, யாஷ், 2, என்பதும், விஜயநகரா ஒசப்பேட் சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.இதுபோல, சித்ரதுர்கா மொளகல்முரு ராம்புரா பகுதியில், நேற்று முன்தினம் இரவு கார் கவிழ்ந்து விபத்துக்குஉள்ளானது. இந்த விபத்தில் காருக்குள் இருந்த, பல்லாரியின் சிருகுப்பா தேசனுாரின் சுரேஷ், 40, மல்லிகார்ஜுன், 25, பூமிகா, 9, இறந்தனர். நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்துகள் குறித்து சித்ரதுர்கா ரூரல், ராம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.