இன்றைய யுகத்தில், மற்றவருக்கு உதவும் மனப்பான்மை உள்ள மக்கள் மிகவும் குறைவு. நான், எனது என்ற மனப்போக்கில் வாழ்வோரே அதிகம். சாலையில் கொலையே நடந்தாலும், எனக்கு என்ன என்பதை போன்று, கடந்து செல்வர். யாராவது விபத்தில் அடிபட்டுக் கிடந்தாலும், வேடிக்கை பார்த்துச் செல்வோரை நாம் பார்த்திருக்கிறோம். அத்தி பூத்தது போன்று, எங்கோ ஒருவர் தன்னலமின்றி, ஏதாவது ஒரு வகையில் மற்றவருக்கு உதவுகின்றனர். இதில் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷும் ஒருவர்.தட்சிண கன்னடா, மங்களூரை சேர்ந்த ரமேஷ், 45, கடந்த 24 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்துகிறார். இவர் மீது போக்குவரத்து போலீசாருக்கு, தனி மரியாதை உண்டு. ஏனென்றால், இவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் சேவையாற்றுகிறார். ஆனால் இதற்காக அவர், ஒரு பைசாவும் வாங்குவதில்லை. சுய விருப்பத்துடன் போக்குவரத்தை சரி செய்து, மக்கள் நடமாட்டத்துக்கு வழி வகுக்கிறார்.இவர் ஆட்டோவில் செல்லும்போது, எந்த சாலையிலாவது போக்குவரத்து நெரிசலை கண்டால், ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு, போக்குவரத்து நெரிசலை சரி செய்து, மக்களின் நடமாட்டத்தை சுமூகமாக்குகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாகன நெரிசலால் சாலையை கடக்க முடியாமல், பள்ளி மாணவர்கள் பரிதவிப்பதை கண்டார்.இது ரமேஷை கடுமையாக பாதித்தது. அன்று முதல் இன்று வரை, பள்ளி, கல்லுாரிகள் விடும்போது, ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டு, போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.வாகன நெருக்கடி அதிகம் உள்ள மங்களூரு நகரின், எம்.ஜி., சாலை, கோடியால் பைல், லால்பாக் பகுதிகளில் மதியம் மற்றும் மாலை நேரத்தில், வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகம். இங்கு ஒரே ஒரு ஏட்டு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது கஷ்டம். இத்தகைய சந்தர்ப்பங்களில், போக்குவரத்து போலீசாருடன், ரமேஷ் இணைந்து பணியாற்றுகிறார்.இந்த உதவிக்காக அவர் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை. இவரது சேவையை உயர் அதிகாரிகளும் மனம் மகிழ்ந்து பாராட்டுகின்றனர். ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், மற்றவருக்கு உதவும் மனப்பான்மையுடன் வாழும் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ், உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறார்.