தட்சிண கன்னடா: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் அருண்குமார் புத்திலா, பா.ஜ.,வில் இணைய தயாராகிறார்.2023 சட்டசபைத் தேர்தலில், புத்துார் தொகுதியில் சீட் அளிக்கும்படி கேட்டார். சீட் கிடைக்காததால், சுயேச்சையாக போட்டியிட்டார். இவர் தோற்றாலும் கூட, 63,000 ஓட்டுகள் பெற்று, பா.ஜ.,வை மூன்றாம் இடத்துக்குத் தள்ளினார்.உள்ளூர் பா.ஜ., தலைவர்கள், அருண்குமார் புத்திலாவிடம் மன்னிப்புக் கேட்டு, கட்சிக்கு வருவதானால் வரவேற்பதாக கூறினர். அவருடன், பா.ஜ., தலைவர்கள் பேச்சு நடத்தினர். அவரும் கட்சியில் இணைய சம்மதித்துள்ளார். இவரை சேர்த்துக்கொள்ள மேலிடமும் ஒப்புதல் அளித்துள்ளது.பா.ஜ.,வில் இணைய வேண்டுமானால், புத்துார் ரூரல் மற்றும் நகர் மண்டல தலைவர் பதவி அளிக்க வேண்டும் என, நிபந்தனை விதித்துள்ளார். தனக்கு தலைவர் பதவி அளிக்காவிட்டாலும் பரவாயில்லை. பா.ஜ.,வுக்காகவே உழைத்து வரும், இரண்டு தலைவர்களுக்கு மண்டல பதவி வழங்கும்படி கோரியுள்ளார்.இதுதொடர்பாக, மாநில தலைவர் விஜயேந்திராவுடன், அருண்குமார் புத்திலா தொலைபேசியில் பேசினார். விரைவில் அருண்குமார் புத்திலா பா.ஜ.,வில் இணைய திட்டமிட்டுள்ளார்.