உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்ப்பு

 யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்ப்பு

புதுடில்லி: ஐ.நா., சபையின் பிரிவான, 'யுனெஸ்கோ' நம் நாட்டின் தீபாவளி பண்டிகையை உலகின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு 'யுனெஸ்கோ' என்றழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உலகின் கலாசார பாரம்பரியம் மிக்க இடங்கள், நிகழ்வுகளின் பட்டியலை பரிந்துரைகளுக்கு ஏற்ப தொகுத்து வருகிறது. இந்நிலையில் யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியங்கள் குறித்த அமர்வு டில்லி செங்கோட்டையில் நடந்தது. அதில், தீபாவளி பண்டிகையை உலகின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளதாக யுனெஸ்கோ குழுவினர் அறிவித்தனர். பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வரவேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'தீபாவளி நம் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்த திருவிழா. 'ஒளி, நீதி, தர்மம் ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது. தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்த்திருப்பது அதன் உலகளாவிய பெருமையை மேலும் உயர்த்தும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த பட்டியலில் சேரும் 16வது பாரம்பரிய நிகழ்வாக தீபாவளி உள்ளது. கும்பமேளா, கொல்கட்டாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, ராமாயண கதையை சொல்லும் ராம்லீலா ஆகியவை ஏற்கனவே யுனெஸ்கோ கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை 2023ல் இந்தியா வழங்கியிருந்தது. இதே போல், 80 நாடுகளில் இருந்து, 63 பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தன. 13ம் தேதி வரை டில்லி செங்கோட்டையில் நடக்கும் கலாசார பாரம்பரியங்கள் குறித்த யுனெஸ்கோ அமர்வில் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ