| ADDED : நவ 24, 2025 10:23 PM
புதுடில்லி: இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்தி வந்த வின்சோ மற்றும் கேமஸ்கிராப்ட் ஆகிய நிறுவனங்கள் வங்கியில் டெபாசிட் செய்திருந்த 523 கோடி ரூபாய் மதிப்பு டெபாசிட்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இந்தியாவில் நிர்தேசா நெட்வொர்க்ஸ் நிறுவனம், கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மற்றும் வின்சோ விளையாட்டு நிறுவனம் ஆகியவை ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தி வந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், பணமோசடி வழக்கில் இந்த நிறுவனங்களுக்கு சொந்தமாக குருகிராம், டில்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களில் கடந்த 18 முதல் 22 வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வின்சோ நிறுவனம் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பயனர்களை, அவர்களுக்கு தெரியாமல் எழுதிவைக்கப்பட்ட மென்பொருளுடன் விளையாட வைத்தது. ஆனால், பயனர்கள் எதிரில் மனிதர்கள் தான் விளையாடி வருகின்றனர் என தவறாக நினைத்து விளையாடினர். இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் விளையாட்டுகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் விளையாட்டை மத்திய அரசு தடை செய்தும், பயனர்களுக்கு தர வேண்டிய 43 கோடி ரூபாயை திருப்பித் தராமல் வங்கியில் வைத்து இருந்தது.மோசடியில் கிடைத்ததாக கருதப்படும் 505 கோடி ரூபாயை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. இந்த பணம் பத்திரங்கள், பிக்சட் டெபாசிட்கள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கேம்ஸ்கிராப்ட் நிறுவனமும், ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்ட பிறகும் பயனர்களுக்கு தர வேண்டிய 30 கோடி ரூபாயை திருப்பித் தராமல் இருந்தது. இந்த நிறுவனம் வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்த 18.57 கோடி ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.