உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியர்களை மீட்கும் பணியில் தூதரகம் தீவிரம்

ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியர்களை மீட்கும் பணியில் தூதரகம் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரஷ்யா - உக்ரைன் இடையிலான சண்டையில் ரஷ்யா சார்பாக போரிட இந்தியர்கள் களமிறக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர்களை கண்காணித்து வரும் இந்திய துாதரகம், மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 'நேட்டோ' எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த 2022 பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது.

அதிர்ச்சி தகவல்

உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலால் தீவிரமடைந்த போர், இன்று மூன்றாம் ஆண்டை எட்டியுள்ளது. இந்தப் போரில், இரு தரப்பிலும் முக்கிய நகரங்கள் சேதமடைந்து, ஏராளமான உயிர்கள் பலியாகின. இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சார்பில் இந்தியர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பரில், 'பாபா வி-லாக்ஸ்' எனும் யு டியூப் சேனல் நடத்தி வரும் பைசல் கான் என்பவர் வாயிலாக இந்தியாவைச் சேர்ந்த சிலர் ரஷ்யா சென்றுள்ளனர். உதவியாளர் பணிக்கு சென்ற அவர்களுக்கு, அங்கிருந்த ரஷ்ய வீரர்கள் வலுக்கட்டாயமாக ராணுவ பயிற்சி வழங்கியதாக கூறப்படுகிறது.இரு மாத பயிற்சிக்குப் பின் அவர்கள், கடந்த ஜனவரி முதல் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலைமையை உணர்ந்து நாடு திரும்ப எண்ணிய அவர்களை, ரஷ்ய வீரர்கள் வெளியேற விடாமல் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவரும், கர்நாடகாவைச் சேர்ந்த மூன்று பேரும், வட மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து பேரும் உள்ளனர். இதில், தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த சுபியான் என்பவர் வாயிலாக இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.சுபியான் குடும்பத்தினரின் கோரிக்கையைத் தொடர்ந்து ரஷ்யா போரில் ஈடுபட்டுள்ள இந்தியர்களை விரைவில் மீட்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

இந்நிலையில், இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ''ஒரு சில இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும்படி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படும் தகவல், எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.''இது குறித்து ரஷ்ய துாதரக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்கள் போர் நடவடிக்கையில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathyasekaren Sathyanarayanana
பிப் 24, 2024 00:07

போர் நடக்கிறது என்று தெரிந்தும் அங்கே சென்றது யாருடைய தவறு? இதற்க்கு அரசாங்கம் எப்படி பொறுப்பாகமுடியும்? பைசல் கான் சேனல் நடத்துகிறாரா இல்லை ராணுவத்திற்கு ஆள் அனுப்புகிறார்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை