உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  குற்றவாளிகளுக்காக மொபைல்போன் தயாரித்த ஆலை கண்டுபிடிப்பு டில்லியில் 5 பேர் அதிரடி கைது

 குற்றவாளிகளுக்காக மொபைல்போன் தயாரித்த ஆலை கண்டுபிடிப்பு டில்லியில் 5 பேர் அதிரடி கைது

புதுடில்லி: குற்றவாளிகள் மற்றும் சைபர் குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில், சட்டவிரோதமாக மொபைல்போன் தயாரித்த ஆலையை டில்லியில் போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, ஐந்து பேரை கைது செய்ததுடன், 1,826 மொபைல்போன் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்துள்ளனர். டில்லியின் மையப்பகுதியான கரோல் பாக், வணிக சந்தைக்கு பெயர் பெற்ற இடம். இங்கு, சட்டவிரோதமாக மொபைல்போன் தயாரிப்பு ஆலை இயங்கி வருவதாக தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கண்காணித்து வந்த சைபர் கிரைம் பிரிவு போலீசார், அங்கு இயங்கி வந்த சட்டவிரோத மொபைல்போன் ஆலையைக் கண்டுபிடித்தனர். அங்கு நடத்திய அதிரடி சோதனையில், 1,826 மொபைல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: பழைய அல்லது திருடப்பட்ட மொபைல்போன் மற்றும் லேப்டாப்களை இவர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மொபைல்போன் மற்றும் லேப்டாப் பாகங்களைப் பயன்படுத்தி, அதை புதிது போல் மாற்றியுள்ளனர். மொபைல்போன்களில், ஐ.எம்.இ.ஐ., எனப்படும் சர்வதேச மொபைல் அடையாள எண் இருக்கும். இதன் வாயிலாக மொபைல்போன் தொலைந்து போனாலும், அது எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியும். மேலும், இந்த 15 இலக்க எண்ணை திருத்த முயன்றால், அது செயல் படாமல் முடங்கி விடும். இந்த மோசடி கும்பல், பழைய மொபைல்போன்களில் உள்ள ஐ.எம்.இ.ஐ., எண்களை, புதிய மொபைல்போன்களுக்கு மாற்றியுள்ளனர். அதே நேரத்தில், அந்த எண்ணை கண்டுபிடிக்க முடியாத தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளனர். இந்த மொபைல்போன்களை, ரவுடிகள் மற்றும் சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். போலீசார் தங்களுடைய இருப்பிடத்தைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, இந்த மோசடி மொபைல்போன்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த ஆலையில், ஆயிரக்கணக்கில் இவ்வாறு மொபைல்போன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அவை யார் யாருக்கு தரப்பட்டுள்ளன என்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை