| ADDED : ஜன 19, 2024 12:37 AM
பெங்களூரு : ''அயோத்தி ராமர் சிலை பற்றி, அமைச்சர் ராஜண்ணா கூறிய சர்ச்சை கருத்திற்கு, முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்று, பா.ஜ., - எம்.பி., சதானந்த கவுடா வலியுறுத்தி உள்ளார்.கர்நாடகா கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா, அயோத்தி ராமர் சிலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பா.ஜ., - ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று அவர் அளித்த பேட்டி:கோலாரில் ராமர் பேனர் கிழிக்கப்பட்ட வழக்கில், இந்த அரசு இதுவரை எத்தனை பேரை கைது செய்து உள்ளது. முதல்வர் சித்தராமையாவின் புகைப்படம் இருக்கும் பேனரும், கிழிக்கப்படும் நாள் விரைவில் வரும். அயோத்தி ராமர் சிலை பற்றி, சர்ச்சை கருத்து கூறிய, அமைச்சர் ராஜண்ணாவுக்கு நேரம் சரியில்லை. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்ப்பது எல்லாம், மஞ்சளாகவே தெரியும்.ராமர் சிலை பற்றிய கருத்துக்காக ராஜண்ணாவும், முதல்வர் சித்தராமையாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்.காங்கிரசில் முதல்வர் பதவிக்கு சண்டை நடக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூன்றாக உடையும். சமீபகாலமாக காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை, பைத்தியகாரத்தனமாக உள்ளது. கோத்ரா சம்பவம் போல, மீண்டும் நடக்கும் என்று ஹரிபிரசாத் கூறுகிறார்.ராஜண்ணா ராமர் சிலையை பற்றி கருத்து தெரிவிக்கிறார். ராமரே இல்லை என்று, நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள், ராமரை பற்றி கருத்து சொல்வதில், ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. எல்லாரும் ராமரை பார்க்க ஆவலாக இருக்கும் போது, காங்கிரசார் மட்டும் புத்தி இல்லாமல் பேசுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.