கல்வி என்பது தொடர் பயணம்!
படிப்புகளில் வேறுபாடு கூடாது; எந்த படிப்பை தேர்வு செய்து படித்தாலும், அது வாழ்க்கைக்கு பயனுள்ளதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு படிப்பிலும் அந்த துறை சார்ந்த கல்வி மற்றும் பயிற்சியை கல்வி நிறுவனங்கள் அளிக்கும். ஆனால், மாணவரது விருப்பத்தின் அடிப்படையிலும், திறமையின் அடிப்படையிலும் படிப்பை தேர்வு செய்வது நல்லது.இந்தியாவை பொறுத்தவரை, படிப்பை தேர்வு செய்வதில் பெற்றோரது ஆதிக்கம் அதிகம் உள்ளதை மறுக்க முடியாது. பெற்றோர் அவரவர் குழந்தைகளின் திறனிற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து சரியான பாடப்பிரிவை தேர்வு செய்வதில் துணை நிற்பது அவசியம். எதிர்கால வாழ்வை நிர்ணயிப்பதில், மிக முக்கியமான காலகட்டமாக கல்லூரி நாட்கள் அனைவருக்கும் அமைகிறது. அத்தகைய காலத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொள்வது மாணவ, மாணவிகளிடமே உள்ளது. நேரத்தை வீணடிக்காமல் இலக்கை அடையும் செயல்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில், அறிவு மட்டுமே போதுமானது அல்ல; திறன்களும் மிக அவசியம். உலகில் உள்ள அனைத்து நாட்டு அரசாங்கங்களும் திறன் வளர்ப்பிற்கும், செயல்முறை கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆகவே, திறன் வளர்க்கும் விதமாக, உள்நாட்டு போட்டிகளில் மட்டுமின்றி, துறை சார்ந்த சர்வதேச போட்டிகளை தேடிக் கண்டறிந்து பங்கேற்க வேண்டும். வெற்றி, தோல்வி பெரிதல்லை; பங்கேற்பும், கடின உழைப்பும் தான் பிரதானம். தோல்வி பொதுவானதே... ஆனால், தோல்வியில் இருந்து எவ்வளவு விரைவாக, எழுந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறோம் என்பதே முக்கியம். எண்ணங்களை நன்றாக வைத்துக்கொள்வதும், சிறந்த பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதும், உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம். 'சோசியல் மீடியா'க்களை அளவோடு பயன்படுத்திக்கொள்வது பலன் தரும்.'இன்டர்வியு'வில் பல்வேறு அம்சங்களை தொழில் நிறுவனங்கள் பரிசோதிக்கின்றன. பிறரிடம் பழகும் விதம், சக பணியாளர்களுடனான நல்லிணக்கம் ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும் வகையில், தாக்கமிக்க தொடர்பியல் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.கல்லூரி காலத்தில் 'இன்டர்ன்ஷிப்' பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் வாயிலாக சிறந்த வேலை வாய்ப்பை பெற முடியும். கல்வி என்பது தொடர் பயணம். அதில் செயல்திறனையும், கற்றல் திறனையும் வளர்த்துக்கொண்டால் தான் வேலையில் நிலைத்திருக்க முடியும். ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த திறனை கண்டறிந்து, அதற்கேட்ப பயிற்சி பெற்றால், சர்வதேச அளவில் சாதனையாளர்களாக வளம் வரமுடியும்.-டாக்டர் தவமணி பழனிசாமி, செயலாளர், என்.ஜி.பி., மற்றும் கே.எம்.சி.எச்., கல்வி நிறுவனங்கள், கோவை.