சென்னை: வணிக வரித்துறையுடன் சேர்த்து, ஒரே செயலர் தலைமையில் செயல்படும் பத்திரப்பதிவு துறையை, தனியாக பிரிப்பது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, 582 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க, 54 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 10 மண்டல அலுவலகங்கள் உள்ளன. ஆண்டுக்கு, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகின்றன. இதன் வாயிலாக, 17,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. அரசின் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு, பத்திரப்பதிவு வருவாயே பிரதான நிதி ஆதாரமாக உள்ளது. பதிவுத்துறை பணிகளை கவனிக்க, ஐ.ஜி., நிலையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளார். இதற்கு மேல் செயலர் நிலையில் வரும் போது, வணிக வரி மற்றும் பதிவுத்துறைக்கு சேர்த்து, ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரி தான் செயலராக நியமிக்கப்பட்டு வருகிறார்.வணிக வரித்துறை என்பது விற்பனை வரி மற்றும் சரக்கு சேவை வரியான ஜி.எஸ்.டி., ஆகியவற்றை கவனித்து வருகிறது. கள நிலையில் வணிகவரி துறைக்கும், பதிவுத்துறைக்கும் சம்பந்தம் இல்லாத நிலை உள்ளது. ஆனாலும், இந்த இரண்டு துறைகளின் பணிகள் விஷயத்தில், ஒரே செயலர் முடிவுகள் எடுக்கும் நிலை உள்ளது. பணியாளர் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பத்திரப்பதிவு துறை பணிகள் பெரும்பாலும், வருவாய் துறை பணிகளுடன் இணைந்து போகும் வகையில் உள்ளது. சொத்து விற்பனை பத்திரங்கள் பதிவு செய்யும் நிலையில், பட்டா உள்ளிட்ட விஷயங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. கள நிலையில் உள்ள தொடர்பை புரிந்து, பதிவுத்துறையை வணிக வரி துறையில் இருந்து பிரித்து, தனி செயலர் தலைமையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, பதிவுத்துறைக்கு தனி செயலர் நியமிக்கலாமா அல்லது வருவாய் துறை செயலரின் கீழ் இணைக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். வழிகாட்டி மதிப்பு நிர்ணயம், மதிப்பு மேல் முறையீடு போன்ற விஷயங்களில், துணை கலெக்டர் நிலையில், வருவாய் துறையினரால் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது போன்ற பணிகளில் ஒருங்கிணைப்பு அவசியம். வருவாய் துறையில், நில அளவை பிரிவு தனித்தன்மை இழக்காமல் இணைந்து இருப்பது போன்று, பதிவுத்துறையும் இணைக்கப்பட்டால், பல்வேறு விஷயங்களில் விரைவாக முடிவுகள் எடுக்கலாம். இதுகுறித்து அரசு தான் இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.