உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வேண்டும் ஒரு ஓட்டு எண்ணிக்கை மையம்; ஒவ்வொரு முறையும் எகிறுகிறது செலவு

வேண்டும் ஒரு ஓட்டு எண்ணிக்கை மையம்; ஒவ்வொரு முறையும் எகிறுகிறது செலவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை;கோவை மாவட்டத்துக்கென பிரத்யேகமாக ஓட்டு எண்ணிக்கை மையம் கட்ட வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி என இரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. கோவை தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் மையமாக, ஜி.சி.டி., கல்லுாரியும், பொள்ளாச்சி தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் மையமாக, டாக்டர் மகாலிங்கம் கல்லுாரியும் அமைக்கப்பட்டு உள்ளன.இதேபோல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்போது, ஓட்டு எண்ணிக்கை மையமாக, ஜி.சி.டி., கல்லுாரி பயன்படுத்தப்படுகிறது. இம்மையத்தை உருவாக்க ஒவ்வொரு முறையும், கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது.'ஸ்ட்ராங் ரூம்'கள் அமைப்பது, ஓட்டு எண்ணும் அறைகளில் தடுப்பு அமைத்து வலை கட்டுவது; 'சிசி டிவி' கேமரா பொருத்துவது; உயர்கோபுர விளக்குகள் அமைப்பது, மாவட்ட தேர்தல் அதிகாரி அறை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள், ஒவ்வொரு தேர்தலின் போதும், தற்காலிகமாக மேற்கொள்ளப்படுகிறது.இவற்றுக்காக ஒவ்வொரு முறையும் பெருந்தொகை செலவிடப்படுகிறது. கோடிக்கணக்கில் பணம் விரயமாவதை தவிர்க்க, பிரத்யேகமாக ஓட்டு எண்ணிக்கை மையம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.ஏனெனில், ஒவ்வொரு முறை தேர்தல் நடத்தும் சமயங்களில் கல்லுாரி வகுப்பறைகளை ஒதுக்குவது, மாணவர்களுக்கும், கல்லுாரி நிர்வாகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்காக வகுப்பறை சுவர்கள் இடிக்கப்பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.முன்பெல்லாம் ஓட்டுப்பதிவு முடிந்த இரண்டாவது நாளே எண்ணப்படும்; இப்போது, பல கட்ட தேர்தல் நடத்துவதால், ஓட்டுகள் எண்ணுவதற்கு, 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை அக்கட்டடத்தின் இதர பயன்பாடு முடங்குகிறது.சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகத்தினர், மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். தேர்தல் நடவடிக்கைகள் முடிந்ததும் மீண்டும் சுவர்கள் கட்டி வகுப்பறையை உருவாக்க, லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கிறது.இதுபோன்ற செலவினங்கள் மற்றும் சிரமங்களை தவிர்க்க, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுபாப்பாக வைக்க, 'இருப்பு கிடங்கு' அமைத்திருப்பதுபோல், ஓட்டு எண்ணிக்கை மையமும் பிரத்யேகமாக கட்ட வேண்டும்.இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால், பிரத்யேகமாக ஓட்டு எண்ணிக்கை மையம் கட்டுவது சிறந்ததே.ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் அக்கட்டடத்தை வேறு உபயோகத்துக்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்க வேண்டும்.உதாரணத்துக்கு, தற்போது அரசு விழாக்கள் கொடிசியா வளாகத்தில் நடத்தப்படுகின்றன. அதை தவிர்க்கும் வகையில், எந்தவொரு நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தாலும், இவ்வளாகத்தில் நடத்தும் வகையில், கட்டமைப்பு ஏற்படுத்தலாம்.அரசு விழாக்கள் இல்லாத சமயத்தில், தனியார் நிறுவனங்கள் விழாக்கள் மற்றும் கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி தரலாம்.அரசுக்கும் வருவாய் கிடைக்கும்; கட்டுமானத்துக்குரிய செலவை ஈடுகட்டலாம். தேர்தல் தேதி அறிவித்ததும், அக்கட்டடத்தை வேறு உபயோகத்துக்கு வழங்குவதை நிறுத்தி வைக்கலாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் கோடிக்கணக்கில் செலவு செய்வதை தவிர்க்கலாம்.கோவையில் ஜி.சி.டி., கல்லுாரிக்கு எதிரே வனக்கல்லுாரி வளாகம் இருக்கிறது; ஏராளமான இடம் காலியாக இருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு பிரத்யேக கட்டடம் கட்டுவதற்கு அவ்விடத்தை பயன்படுத்தலாம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் துரித நடவடிக்கை எடுத்தால், தேவையற்ற செலவினங்களை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

'சாத்தியக்கூறு ஆராயப்படும்'

மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமாரிடம் கேட்டதற்கு, ''தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்க, மாவட்டத்துக்கு ஒரு 'ஸ்ட்ராங் ரூம்' கட்டப்பட்டு இருக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையம் இதுவரை வேறெங்கும் கட்டியதில்லை.ஓட்டு எண்ணுவது மட்டுமின்றி, வேட்பாளர்களின் ஏஜன்ட்டுகள் வந்து செல்வது உட்பட பல்வேறு தேவைகளுக்கு பெரிய அளவில் இடம் தேவை. இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என, ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜி. கிருஷ்ணன்.
மே 21, 2024 07:48

கோவையில் ஓட்டு எண்ணிக்கை தனி மையம் கோரிக்கை அபத்தம். எங்கும் அதுபோல் இல்லை. வரும் 2029 வரைதான் அடிக்கடி தேர்தல். பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். எனவே தனி மையம் தேவை இல்லை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை