உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லியில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் பா.ஜ.,: வாகை சூடுமா ஆம் ஆத்மி - காங்., கூட்டணி?

டில்லியில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் பா.ஜ.,: வாகை சூடுமா ஆம் ஆத்மி - காங்., கூட்டணி?

டில்லியில் மூன்றாவது முறையாக, அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில், மத்தியில் ஆளும் பா.ஜ., வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. அந்த கட்சியின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்க, ஆம் ஆத்மி - காங்., கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.நாட்டின், 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. மத்தியில், தொடர்ந்து இரண்டாவது முறையாக, ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்த, காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., - ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், 'இண்டியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

அரங்கேறிய நிகழ்வு

தலைநகர் டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும், மே 25ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.டில்லியை பொறுத்தவரை, சட்டசபை தேர்தல் என்றால், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கும், லோக்சபா தேர்தல் என்றால், பா.ஜ.,வுக்கும் அங்குள்ள வாக்காளர்கள் ஓட்டளித்து வருகின்றனர். இது, கடந்த காலங்களில் அரங்கேறிய நிகழ்வு.கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில், டில்லியில் உள்ள ஏழு லோக்சபா தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றியது. வரும் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில், அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரசுடன் எக்காலத்திலும் கூட்டணியே வைக்க மாட்டேன் என அறைகூவல் விடுத்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது அதையெல்லாம் மறந்து, பா.ஜ.,வை தோற்கடிக்க காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார். டில்லியில் எலியும், பூனையுமாக இருந்த ஆம் ஆத்மி - காங்., இம்முறை, 'நண்பர்'களாக வலம் வருகின்றன.விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை திருத்த சட்டம் போன்ற பிரச்னைகளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, ஆம் ஆத்மி - காங்., கூட்டணி முடிவு செய்துள்ளது.கெஜ்ரிவால் தற்போது ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார். இதை வைத்து அனுதாபம் தேடி ஓட்டு சேகரிக்கவும் ஆம் ஆத்மி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.அதே சமயம், மத்திய அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை முன்வைத்து ஓட்டு கேட்க, பா.ஜ.,வினர் முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில், டில்லியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். சாந்தினி சவுக் தொகுதியின் பாரம்பரியத்தை பாதுகாக்க, கலாசார பாதுகாப்பு மையத்தை நிறுவ உள்ளதாக, அத்தொகுதி பா.ஜ., வேட்பாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்தார்.மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளும், புதுடில்லி வேட்பாளருமான பன்சூரி ஸ்வராஜ், இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்களை ஊக்குவிக்க பாடுபடுவேன் என, வாக்குறுதி அளித்துள்ளார்.

தடுத்தது யார்?

இதே போல், பா.ஜ., கிழக்கு டில்லி வேட்பாளர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, மேற்கு டில்லி வேட்பாளர் கமல்ஜீத் செஹ்ராவத் ஆகியோர், தங்கள் தொகுதிகளில் டில்லி பல்கலை வளாகம் அமைப்பதாக வாக்குறுதிகளை அளித்து உள்ளனர்.இதற்கு பதிலடி கொடுத்து, ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ''டில்லியில் வளர்ச்சிப் பணிகளை தடுத்தது யார்? டில்லியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மோடி அரசுஎதுவும் செய்யவில்லை. ''மத்திய அரசின் கட்டுப்பாட்டில் காவல் துறை இருக்கிறது. எனினும் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தேர்தலில் டில்லி மக்களிடம் ஓட்டு கேட்கும் முன், கடந்த 10 ஆண்டுகளில், பா.ஜ., - எம்.பி.,க்கள் தங்களது செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என்றார்.- நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை