உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது; ஷாக் கொடுத்த தென்கொரிய நிறுவனம்

தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது; ஷாக் கொடுத்த தென்கொரிய நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், 1,720 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க, மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த, 'ஹ்வாஸுங்' நிறுவனம், தனது முதலீட்டை ஆந்திராவுக்கு திருப்பியுள்ளது. இதற்கு, அம்மாநில அரசு ஒரு ஏக்கர் நிலத்தை, 99 காசு என்ற சொற்ப விலைக்கு வழங்க முன்வந்ததே முக்கிய காரணம்.தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் சார்பில், துாத்துக்குடியில் கடந்த ஆகஸ்டில் மண்டல அளவிலான முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடந்த மாநாட்டில், 32,554 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 41 நிறுவனங்களுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.

மனை ஒதுக்கவில்லை

அதில், தென் கொரிய நாட்டை சேர்ந்த ஹ்வாஸுங் என்டர்பிரைசஸ், தோல் அல்லாத காலணி துறையில், 1,720 கோடி ரூபாய் முதலீட்டில், ஆலை அமைத்து 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.இந்நிறுவனம், ஆலை அமைக்க, சென்னை அருகில் சலுகை விலையில் நிலம் வழங்குமாறு, வழிகாட்டி நிறுவனத்திடம் கேட்டது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள தொழில் பூங்காக்களில் நிலத்தின் மதிப்பு அதிகம் என்பதால், சலுகை விலையில் மனை ஒதுக்கப்படவில்லை.இந்நிலையில், ஹ்வாஸுங் நிறுவனம், தமிழகத்தில் செய்ய இருந்த முதலீட்டை, ஆந்திர மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. இந்நிறுவனம் அம்மாநிலத்தின் குப்பத்தில் ஆலை அமைக்க உள்ளது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார்.

அரசு ஏற்கவில்லை

இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு அதிகம். தேனி, தஞ்சை, துாத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொழில் துவங்குவோருக்கு சலுகை விலையில் நிலம் வழங்கப்படுகிறது. இப்பகுதிகளில், ஹ்வாஸுங் நிறுவனத்திற்கு, ஒரு ஏக்கர், 30 லட்சம் ரூபாய்க்கு வழங்க, உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று அந்த நிறுவனம், தஞ்சாவூரில் தொழில் துவங்க முன்வந்தது.இந்த சூழலில், ஆந்திர அரசு, திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள, தங்கள் மாநில எல்லை பகுதியில், ஒரு ஏக்கர், 99 காசுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதை ஏற்று அந்நிறுவனம் அங்கு செல்ல முடிவு செய்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும், அந்நிறுவன அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். ஆந்திராவில் வழங்குவது போல் சலுகை விலை தருமாறு, நிறுவனம் தரப்பில் கேட்கப்பட்டது. சாத்தியமில்லாத காரணத்தால், அரசு அதை ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வரும், ஆனா வராது

தமிழகத்திற்கு வர வேண்டிய கொரிய நிறுவனம், ஆந்திராவுக்கு சென்றதற்கு தி.மு.க., ஆட்சியில் நடக்கும் கமிஷன் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீரழிவே காரணம் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரது அறிக்கை: கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாஸுங் நிறுவனம், தமிழகத்தில் தொழில் துவங்கவுள்ளதாக அறிவித்தது. ஆனால், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்திற்கு அதன் முதலீடு செல்கிறது. முதல்வர், நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என 'ஷோ' காட்டியதால், தமிழகத்துக்கு என்ன பயன்? வருவதாக சொன்ன நிறுவனங்களே பின்வாங்கும் நிலையில் தான் ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். சீர்கெட்ட சட்டம் - ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன், ஊழல்கள் என தமிழகத்தை தி.மு.க., அரசு சீர்குலைத்துள்ளது. விளம்பர மாடல் நிகழ்ச்சிகள், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா? தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளை பேப்பரை காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார். இத்தகைய வெறும் ஷோ காட்டும் ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதலீடுகளை இழக்கும் தமிழகம்

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொழில் துறை அமைச்சர் ராஜா உறக்கத்தில் இருக்கும் போது, அவர்கள் பெருமையுடன் அறிவித்த முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன. தென் கொரிய நிறுவனமான ஹ்வாஸுங்,1,720 கோடி ரூபாய் முதலீடு என அறிவித்த மூன்று மாதங்களுக்குள் ஆந்திராவுக்கு அதை எடுத்து செல்கிறது. சர்வதேச முதலீடுகளை ஈர்க்க, மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறி வரும் சமயத்தில், தமிழகம் மெத்தனம் மற்றும் நிர்வாக திறனின்மையால், வாய்ப்பை இழந்து வருகிறது. வாய்ப்புகளின் பூமியாக இருந்த தமிழகத்தை, தவறவிட்ட வாய்ப்புகளின் பூமியாக மாநில அரசு மாற்றியுள்ளது.

விளையாட்டு அல்ல

இது குறித்து, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா அறிக்கை: முதலீட்டு ஊக்குவிப்பு என்பது விளையாட்டு அல்ல. வேலைவாய்ப்பு, முதலீடு எந்த பகுதியில் செய்யப்படுகிறது என்பதை பொறுத்து, சில துறைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலினின் நோக்கம் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி. எனவே, முதலீடுகளுக்கான ஊக்கத்தொகை என்பது ஒரு நிறுவனம் எங்கு செயல்பட விரும்புகிறது என்பதை பொறுத்தது. நம் நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசுகள், மக்களின் தேவைகளுக்கு ஏற்றபடி செயல்படுகின்றன. சில அரசுகள், வறண்ட நிலங்களின் பெரிய நிலப்பரப்பை கொண்டிருந்தாலும், மற்றவை அதிக மதிப்புள்ள நிலங்களை கொண்டுள்ளன. அவை, உருவாக்கப்படும் வேலைகளின் ஒப்பீட்டு மதிப்புடன் ஊக்கத்தொகை அளவை மதிப்பிடாமல், விட்டு விட முடியாது. நம்பத்தகாத தொகுப்புகளை வழங்குவதில், நாங்கள் எந்த நேரத்திலும் அடிமட்டத்திற்கு செல்லும் போட்டியில் சேர மாட்டோம். சில எதிர்க்கட்சி தலைவர்கள் அரசை குறைத்து மதிப்பிட விரும்பினாலும், அதிக முதலீடு பற்றிய அறிவிப்புகளால், அவர்களின் வாயை மூடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை