கட்சி நிர்வாகிகளை தொடர்ந்து ஓரங்கட்டி வந்ததால், அவர்கள் த.வெ.க.,விற்கு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான புகார்களின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.,வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அறிவாலயத்தில் சட்டசபை தொகுதி வாரியாக, 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சி வாயிலாக, தி.மு.க., நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வருகிறார். அவர்கள் தெரிவிக்கும் தகவல் அடிப்படையில், கட்சி பணிகளை சரியாக செய்யாத மாவட்டச் செயலர்கள் முதல், பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கி வருகிறார். சட்டசபை தேர்தலுக்கு முன், சில மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று, ராமநாதபுரம், காரைக்குடி, மானாமதுரை சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டச் செயலரும், எம்.எல்.ஏ.,வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீதான புகார்கள் குறித்து கேட்டறிந்த முதல்வர், அவரை கடுமையாக கண்டித்துள்ளார். இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் கடைகள் புதுப்பித்து கட்டப்பட்டன. அவற்றை ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு வழங்கவில்லை. நகராட்சி நிர்வாகத்தினரிடம் சிபாரிசு செய்து, வேண்டப்பட்டவர்களுக்கு கடைகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் விமர்சித்து பேசி வருகிறார். இதற்கிடையில், தி.மு.க., - ஐ.டி., அணியில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள் சிலரை, கட்சியிலிருந்து ஓரம் கட்டியுள்ளார். அவர்களில் சிலர், த.வெ.க., நடத்திய சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் பங்கேற்று, அக்கட்சியில் இணைந்து விட்டனர். இதனால், மாவட்டத்தில் கட்சி மோசமான நிலையை எட்டி உள்ளது. இது குறித்த புகார்களை, முதல்வர் ஸ்டாலினிடம், 'ஒன் டூ ஒன்' சந்திப்பின்போது, கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். விசாரணை நடத்திய பின், காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை, முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டும்; இது குறித்து தொடர்ந்து விசாரிப்பேன். உங்கள் போக்கில் மாறுதல் இல்லை என்றால், மாற்று ஏற்பாட்டை செய்வேன் என்றும் காதர்பாட்சாவிடம் சொல்லி அனுப்பி உள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -