சென்னை : தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம், பா.ஜ., மவுன ஊர்வலம் இன்று(ஆக.,26) ஒரே நாளில் நடப்பதால், தமிழக அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் இன்று, சென்னை அறிவாலயத்தில், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. ஸ்டாலின் அமெரிக்க பயணம் வெற்றி பெறுவது குறித்தும், துணை முதல்வர் பதவியை அமைச்சர் உதயநிதிக்கு வழங்கவும் வலியுறுத்தி, மாவட்ட செயலர்கள் பேச உள்ளனர்.லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட செயலர்களுக்கு பாராட்டும், ஓட்டுகள் சதவீதம் குறைந்த மாவட்ட செயலர்களுக்கு குட்டும் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.சரிவர செயல்படாத அமைச்சர்களை மாற்றுவதற்கு எச்சரிக்கையும், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச்செயலர் நியமிப்பது குறித்தும், ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. அ.தி.மு.க., செயற்குழு
அதேபோல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. மாவட்டங்களை கட்சி அமைப்பு ரீதியாக பிரித்து, புதிய மாவட்ட செயலர்கள் நியமித்தல்; உறுப்பினர்கள் அட்டைகள் வழங்குதல்; இளைஞர் பாசறையை பலப்படுத்துதல் குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. தி.மு.க., அரசுக்கு எதிரான கண்டன தீர்மானங்களும் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது. பா.ஜ., ஊர்வலம்
தமிழகத்தில், இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மேற்கு வங்கத்தில் நடந்த மருத்துவ மாணவி கொலையை கண்டித்தும், தமிழக பா.ஜ.,வினர் பங்கேற்கும் மவுன ஊர்வலம், மாநிலம் முழுதும் இன்று நடக்கவுள்ளது. தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள், ஒரே நாளில் கூட்டங்கள், ஊர்வலம் என்று நடத்துவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.