உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழக பயங்கரவாதிகள் 10 பேர் பதுங்கியது எங்கே?துப்பு கிடைக்காமல் திணறும் உளவு போலீஸ்!

தமிழக பயங்கரவாதிகள் 10 பேர் பதுங்கியது எங்கே?துப்பு கிடைக்காமல் திணறும் உளவு போலீஸ்!

கோவை: தமிழகத்தில், கடந்த காலங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் மற்றும் மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய, 10 பயங்கரவாதிகள், போலீசாரிடம் பிடிபடாமல் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தலைமறைவு பயங்கரவாதிகள் மீதான கண்காணிப்பை, தமிழக உளவுத் துறை தீவிரப்படுத்தியிருக்கிறது.கடந்த, 1998, பிப்., 14ல், 'அல் உம்மா' வினரால், கோவையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் பலியாகினர்; 250 பேர் காயமடைந்தனர். இந்த நாசவேலைக்குப் பின், தமிழகத்தில் வேறு எங்கும் பெரிய அளவிலான வெடிகுண்டு சம்பவம் நிகழவில்லை. மதுரையில், பா.ஜ., தலைவர் அத்வானி வருகையின்போது, பாலத்தின் கீழ், 'பைப்' குண்டு பறிமுதல் செய்யப்பட்டது; போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளால், மதவாத செயல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.இந்நிலையில், சென்னை சென்ட்ரலில், நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு, மத்திய, மாநில உளவுப் போலீசாரை உஷார்படுத்தியிருக்கிறது. இதற்கு முன், தமிழகத்தில் நிகழ்ந்த நாசவேலைகளில் தேடப்படும் பயங்கரவாதிகள் பற்றிய விவரங்கள், மாநிலம் முழுவதும் போலீசாருக்கு பகிரப்பட்டு, கண்காணிப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.தமிழக போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்படும், 10 பயங்கரவாதிகள் பற்றிய விவரங்கள்:முஸ்டாக் அகமதுவேலூர் மாவட்டம், வாணியம்பாடி, எம்.பி., வீதியைச் சேர்ந்த இவர், தடை செய்யப்பட்ட, 'அல்- உம்மா' அமைப்பின் தீவிர உறுப்பினர். 1992ல் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி ஸ்ரீதரை, சென்னையில் கொலை செய்ய முயன்றது மற்றும் 1993ல் சென்னை, சேத்துப்பட்டு, ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வைத்து, 11 பேரை கொலை செய்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்.கடந்த 1992 முதல் தலைமறைவாக இருக்கும் இவரது தலைக்கு, தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தும், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.முஜிபுர் ரகுமான்கோவை, போத்தனூர், நூராபாத், ஷேக் முகைதீன் சாகிப் வீதியைச் சேர்ந்த இவர், 1997ம் ஆண்டில் உடுமலை நகராட்சி வணிக வளாக குண்டுவெடிப்பில் நேரடி தொடர்புடையவர். 1998, பிப்., 14ல், கோவை நகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர். இந்த குண்டுவெடிப்பில், 58 பேர் பலியாகி, 250 பேர் காயமடைந்தனர். கோவை மற்றும் உடுமலை போலீசில், ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரை பற்றி தகவல் அளிப்போருக்கு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படுமென, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.அபூபக்கர் சித்திக்நாகப்பட்டினம், நாகூரைச் சேர்ந்த இவர், 'அல் - உம்மா' உறுப்பினர். 1995ல் நாகப்பட்டினம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் ஜீவரத்தினத்துக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பி கொல்ல முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.விருதுநகரைச் சேர்ந்த அகமது அம்மான், கோவை நகரைச் சேர்ந்த ஜாகிர் உசேன் ஆகியோருடன் வெடிகுண்டு தயாரித்து, கொச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைத்தவர். கோவை குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர். போலீசார் பல இடங்களில் தேடியும், அபூபக்கர் சித்திக் பிடிபடாததால், தலைக்கு தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தது.அஷ்ரப் அலிகோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர், கேரளாவில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர். 2002ல், கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சுல்தான் மீரான், இந்து அமைப்பினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் வகையில், 2002, மார்ச் 28ல், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலர் முருகேசன், வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் அஷ்ரப் அலி, தேடப்படும் குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டுள்ளார்.சாதிக்கோவை, தெற்கு உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இவர், 'அல் - உம்மா' இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். 1996ல், கோவை மத்திய சிறை வளாகத்தில், கூட்டாளிகளுடன் நுழைந்து சிறை டி.ஐ.ஜி.,யை கொல்ல முயன்றவர். தடுக்க முயன்ற சிறைக்காவலர் பூபாலன் கொல்லப்பட்டார். அடுத்து, 1997ல் மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் ஜெயபிரகாஷ் கொல்லப்பட்ட வழக்கிலும், சாதிக்கிற்கு தொடர்பு உண்டு.கடந்த 1998ல் கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பிலும், இவருக்கு தொடர்பு இருந்ததை சி.பி.சி.ஐ.டி., - எஸ்.ஐ.டி., போலீசார் கண்டறிந்தனர். பல இடங்களில் தேடியும் தகவல் இல்லாததால், இவரது தலைக்கு, தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தது.அயூப்கோவை, செல்வபுரம், கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த இவர், 'இஸ்லாமிக் டிபன்ஸ்' இயக்கத்திலும், 'அல் -உம்மா' அமைப்பிலும் அங்கம் வகித்தவர். 1997ல், பாண்டியன், சேரன் மற்றும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர். இக்குண்டுவெடிப்பு சம்பவங்களில், 10 பயணிகள் பலியாகினர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான அயூப் தலைமறைவாக உள்ளார்.இவர் மீது ஈரோடு, திருச்சி, திருச்சூர் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன்கள், சென்னை கே.கே.நகர், வேப்பேரி, புளியந்தோப்பு, ராயப்பேட்டை, அண்ணாசாலை போலீஸ் ஸ்டேஷன்களில், வெடிகுண்டு வழக்குகள் உள்ளன. இவரது தலைக்கும் தமிழக அரசு இரண்டு லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்தும், தகவல் இல்லை.குஞ்சு முகமதுகேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், ராமபுரம், பனங்கங்கரா பகுதியைச் சேர்ந்த இவர், 1998, பிப்., 14ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்.இப்ராகிம்கோவை, குனியமுத்தூர், திருமூர்த்தி நகரைச் சேர்ந்த இவர், 2002, மார்ச் 28ல், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலர் முருகேசன் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி. போத்தனூர் போலீசாரால், 'தேடப்படும் குற்றவாளியாக' அறிவிக்கப்பட்டு, 12 ஆண்டுகளாகியும் இன்னமும் பிடிபடவில்லை.முகமது அலிநெல்லை மாவட்டம், மேலப்பாளையம், இப்ராகிம் தாய்க்கா வீதியைச் சேர்ந்த இவர், கடந்த 1999ல் சென்னை, சிறைத்துறை ஐ.ஜி., அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர். சென்னைஎழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன்களில், இவர் மீது வெடிகுண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.நூகுகேரள மாநிலம், கோழிக்கோடு, திருவன்னு பனியங்கரா பகுதியைச் சேர்ந்த இவர், 1998, பிப்., 14ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர். இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.தலைமறைவு பயங்கரவாதிகள், பல ஆண்டுகளாக பிடிபடாதது குறித்து, தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தலைமறைவு பயங்கரவாதிகளில் சிலர், 15 - 20 ஆண்டுகளாகக் கூட பிடிபடாமல் உள்ளனர். அவர்களது தற்போதைய உருவத் தோற்ற புகைப்படங்கள் யார் வசமும் இல்லை. சிறுவயதில், அதாவது, அவர்கள் தலைமறைவான காலத்தில் கிடைத்த சில போட்டோக்களை வைத்து, தற்போது, இப்படித்தான் முகத்தோற்றம் மாறியிருக்கும் என்ற யூகத்தில் அடிப்படையில் தேடவேண்டியுள்ளது; இருப்பினும், நம்பிக்கை தளரவில்லை. தலைமறைவு பயங்கரவாதிகளின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களின் இல்லத் திருமணங்கள், மரணங்களின் போது, 'அவர்கள்' வரக்கூடும் என்ற 'அலர்ட்' அடிப்படையில் ரகசியமாக கண்காணிக்கிறோம். சமீபத்தில் கூட, கோவையில், தலைமறைவு நபர் அயூப்பின் தந்தை காலமானார். இரவு, பகலாக கண்காணிப்பு மேற்கொண்டோம்.தற்போது, சென்னை சம்பவத்துக்குப் பின், தலைமறைவு பயங்கரவாதிகளின் போட்டோவுடன் கூடிய விவரங்கள், மாநிலம் முழுவதுமுள்ள போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. தலைமறைவு பட்டியலில் உள்ள பயங்கரவாதிகள் மீதான கண்காணிப்பு, மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி